தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நேரலையில் முழுமையாக ஒளிபரப்பாவதால் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரை தமிழ்நாடு மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

சட்டம், ஒழுங்கு விவாதம்:

கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் அனல் பறக்க நடந்து வருகிறது. தவெக - திமுக இடையேயான காரசார வாக்குவாதத்துடன் தினசரி நடக்கும் இந்த கூட்டத்தொடரில் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை சட்டம் ஒழுங்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சட்டம் ஒழுங்கு மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது, சட்டம் ஒழுங்கு துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிப்பதற்கு பதிலாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோர் பதிலளித்தனர்.

என்ன பதில் சொல்லப்போகிறார் விஜய்?

முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய நிலையில், அவர் திங்கள்கிழமை அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக தெரிவித்ததுடன், தான் பதிலளிக்கும்போது திமுக-வினர் எழுந்து ஓடக்கூடாது என்று கிண்டலாக பேசினார்.

இந்த பரபரப்பான சூழலில், திங்கள்கிழமையான நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளார். இதனால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான மீம்ஸ்களும், வீடியோக்களும் இணையத்தில் தவெக-வினராலும், திமுக-வினராலும் பதிவிடப்பட்டு வருகிறது.

எதிர்பார்ப்பு:

தவெக ஆட்சி பொறுப்பேற்ற 120 நாட்களில் நடந்த கொலைகள், கொள்ளைகளை உதயநிதி ஸ்டாலின் தரவுகளாக தெரிவித்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் என்ன பதிலளிக்கப்போகிறார்? கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு பற்றி விஜய் என்ன பேசப்போகிறார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அடுத்த 2 நாட்கள்:

சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டுமே சட்டமன்றம் நடைபெற உள்ளதால் இந்த இரண்டு நாட்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பாவதால் விஜய் திமுக-வை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? விஜய்யை திமுக எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்பதை காணவும் தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், இன்னும் 2 நாட்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிய உள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article