தமிழ்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது. கூட்டத்தொடரில் இன்று பத்திரப்பதிவுத் துறை மீதான மானியக்கோரிக்கை மீது பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதன் விவரங்களை கீழே காணலாம்.

1. நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டு 24/7 இணையவழி ஆவணப்பதிவு வசதி ஏற்படுத்தப்படும்.

2. ஆவணங்கள் இணையவழியில் பதிவேற்றி, புகைப்படம் மற்றும் கைரேகையுடன் காகிதமில்லா பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

3. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ஃபு வாரிய நிலப்பதிவுகளை ஸ்டார்-ல் நேரடியாக உள்ளீடு செய்து, மோசடி பதிவுகள் தடுக்கப்படும்.

4. 2018 முதல் பதிவான ஆவணங்களின் நகல்களை இணையவழியில் உடனடியாக பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.

5. மாநிலம் முழுவதும் பதிவாகும் ஆவணங்களை ஆய்வு செய்ய ரூபாய் 1.50 கோடியில் தரவு பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும்.

6. சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும்.

7. அதிக ஆவணப்பதிவுகள் உள்ள அலுவலகங்களின் பணிப்பளுவைக் குறைக்க சார்பதிவக எல்லைகள் மறுசீரமைக்கப்படும்.

8. 25 மாதிரி பதிவு மையங்கள் நிறுவப்பட்டு நீண்ட வரிசைகள் மற்றும் இட நெருக்கடி குறைக்கப்படும்.

9. ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்ப ஆலோசனையுடன் ஸ்டார் 2.0/3.0 மென்பொருள் மேம்படுத்தப்படும்.

10. ஏபிஐ தொழில்நுட்பம் மூலம் சான்றிதழ் எண்களை நிகழ்நேரத்தில் சரிபார்த்து போலி ஆவணப்பதிவுகள் தடுக்கப்படும்.

11. உயர் அலுவலர்களின் திறன் மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்த பதிவுத்தறை பயிற்சிக்கு ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பத்திரப்பதிவுத்துறை மட்டுமின்றி வணிக வரித்துறையிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் விசாரணை வரம்பு ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 1 கோடியாக உயர்த்தப்படும்.

2. மாநில அளவிலான தரவு பகுப்பாய்வு மற்றும் அலுவலர்களின் பணித்திறன் கண்காணிப்பிற்காக புதிய பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு உருவாக்கப்படும்.

3. வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தை மேம்படுத்த வரி நிர்வாகத்தில் முகம் அறியாத நடைமுறை விரிவுபடுத்தப்படும்.

4. அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அறிவு, திறனை மேம்படுத்த துறையின் பயிற்சி கொள்கை மறுசீரமைக்கப்படும்.

5. வணிகர்களின் வரி தொடர்பான குறைகளைத் தீர்க்க சீர்மிகு இணையதள வசதி உருவாக்கப்படும்.

6. ஒவ்வொரு வணிகவரிக் கோட்டத்திலும் முந்தைய வரிச்சட்டங்களின் கீழ் உள்ள வணிகர்களை நிர்வகிக்க தனி வரி விதிப்பு வட்டம் உருவாக்கப்படும்.

7. முதல் விற்பனை நிலையில் வரி செலுத்திய பெட்ரோல் - டீசல் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டத்தின் கீழ் பதிவு பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

Source: Read Full Article