Pallavaram-Thoraipakkam Radial Road: பல்லாவரம் - துரைப்பாக்கம் வழித்தட ரேடியல் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாம்.

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் புதிய பாலம்:

நவீன தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலமான சென்னை ஒன் தொடங்கி காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரையிலான பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், சுமார் 2 கிலோ மீட்டர் பகுதி வெகுவிரைவில் இல்லாமலே போகும் என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள நீர் எந்தவித இடையூறுமின்றி பாயும் வகையில், அந்த சாலை அமைந்துள்ள 7 ஹெக்டேர் நிலப்பரப்பு மீண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைய உள்ளதாம். இதற்கு மாற்றாக சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பாலம் அமைக்கும் முடிவிற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி வடிவம் பெற்று வருகிறதாம்.

ட்ராஃபிக் ஓவர்? 6 வழி மேம்பால திட்டம்:

துரைப்பாக்கம் பகுதியில் சென்னை ஒன் நிறுவனத்திற்கு முன்பாகத் தொடங்கி, காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு 100 மீட்டர் முன்பாக வந்து இறங்கும் வகையில், ஆறு வழித்தடங்களைக் கொண்ட உயர்மட்டச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளதாம். இந்த உயர்மட்டப் பாலத்தின் இடையில் அமைக்கப்படும் தூண்களின் நீளம் 200 மீட்டர் வரை இருக்குமாம். இதனால் பாலத்தின் மேல் கட்டமைப்பைத் தாங்கும் தூண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஒவ்வொரு தூணும் 2.5 மீட்டர் விட்டம் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி ஏதுமில்லை என்பதால், கட்டுமானப் பணிகளை முடிக்க இரண்டு ஆண்டுகள் போதுமானதாக கணிக்கப்பட்டுளது.

ரூ.450 கோடி செலவில் மேம்பாலம்

ரேடியல் சாலையில் அமைக்கப்பட உள்ள புதிய பாலத்திற்கான கட்டுமானச் செலவு மட்டும் சுமார் 450 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளின்போது போக்குவரத்து மாற்றங்களைச் செய்வது மட்டுமே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. ராஜீவ் காந்தி சாலையை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை மற்றும் ஜிஎஸ்டி (GST) சாலை ஆகியவற்றுடன் இணைக்கும் இந்தச் சாலையைப் பயன்படுத்தி தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.25 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.

வெள்ள பாதிப்பு தடுக்கப்படும்..!

சதுப்பு நிலத்தில் அமைந்துள்ள சாலையை அகற்றி புதிய மேம்பாலம் அமைக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ராம் நகர், வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு ஒரு தீர்வாக அமையும். இந்த வழித்தடம் வாயிலாக சுமார் 15,000 கன அடி நீர் ஒக்கியம் மடுவை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது, 2,100 மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலையில் 90 மீட்டர் தூரத்தில் மட்டுமே நீர்வழிப் பாதைகள் (culverts) உள்ளன. வெள்ள நீர் தடையின்றிச் செல்ல இது போதுமானதாக இல்லை. எனவே சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள ஒரு சாலை அகற்றப்படுவது அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்

ரேடியல் சாலையின் முக்கியத்துவம்:

சுமார் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கான பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை (200 அடி) சென்னையின் தெற்கு/மேற்கு நுழைவாயில்களுக்கும் கிழக்கு தகவல் தொழில்நுட்ப வழித்தடங்களுக்கும் இடையேயான பயணத்திற்கு ஒரு முக்கிய இணைப்பாகும்

பல்லாவரத்தில் உள்ள க்ராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜிஎஸ்டி) சாலையை, துரைப்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப வழித்தடத்துடன் நேரடியாக இணைக்கிறது

தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் குன்றத்தூர் போன்ற தெற்கு/மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கும், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் போன்ற கிழக்கு தகவல் தொழில்நுட்ப மையங்களுக்கும் இடையே செல்லும் போக்குவரத்து, கிண்டி மற்றும் கத்திப்பாரா போன்ற நகரின் உட்புறத்தில் உள்ள நெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்க்க வழிவகை செய்கிறது

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான அணுகலை வழங்குகிறது.

தென்மாவட்ட பயணங்களுக்கான முக்கிய இணைப்பு சாலையாகவும் ரேடியல் சாலை அமைந்துள்ளது.

திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட ரேடியல் சாலை

ரேடியல் சாலை மற்றும் பல்லாவரம் – குன்றத்தூர் சாலை, ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆரின் சில பகுதிகள், சோழிங்கநல்லூர் – குடிமியான் தோப்பு சாலை, கோடம்பாக்கம் – ஸ்ரீபெரும்புதூர் சாலை மற்றும் சென்னை புறவழிச்சாலை உள்ளிட்ட சாலைகள் அனைத்தும், சி.எம்.டி.ஏ-வால் அமைக்கப்பட்ட 'சென்னை பகுதி போக்குவரத்து ஆய்வுப் பிரிவு' மூலமாகவே திட்டமிடப்பட்டன. குறைந்தது 15 சாலைகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இச்சாலைகளை அமைப்பதற்காக 1998-1999 காலகட்டத்தில் ஒரு தனி தலைமைப் பொறியாளர் பிரிவு உருவாக்கப்பட்டது. கட்டிட இடிபாடுகள் மற்றும் சில வகையான குப்பைகளைக் கூடப் பயன்படுத்தி அந்த ‘ரேடியல்’ சாலை அமைக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய முன்னாள் துறைசார் பொறியாளர்கள், “சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு செயல்படும் என்பது குறித்து தெரியாததால், சாலையின் சில பகுதிகள் உள்வாங்கிக் கொண்டன. அக்காலத்தில் போதிய சுற்றுச்சூழல் குறித்த புரிதல் எங்களுக்கு இல்லை” என்று குறிப்பிடுகின்றனர்.

Source: Read Full Article