தமிழகத்தின் வளர்ச்சி- புதிய விமான நிலையம் எங்கே.?

தமிழக தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தொழில் வளர்ச்சியும் முன்னேறி வருகிறது. எனவே தற்போதுள்ள சென்னை விமான நிலையம், இடவசதி இல்லாமல் சிக்கி திணறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற மாநிலங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய நிலையானது ஏற்பட்டுள்ளது. எனவே பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க கடந்த அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் திட்டமிட்டது.

ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது.

விமான நிலையம் -இரண்டு இடங்களை தேர்வு செய்த தமிழக அரசு

இதனை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார். இது தொடர்பாக கூறுகையில், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் புதிய விமான நிலையம் அமைக்கபதற்க்கான இடங்கள் தேர்வு செய்யும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மானெல்லூர் ஆகிய இரண்டு இடங்களில் தமிழக அரசு சார்பாக பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத வகையில் விமான நிலையத்தை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் TIDCO குழு ஏற்கெனவே இந்த இரண்டு இடங்களிலும் முதற்கட்ட ஆய்வை முடித்துள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு இடங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ளுமாறு விமான நிலையங்கள் ஆணையத்தை தமிழக அரசு தற்போது கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய விமான நிலையம் எங்கே.?

மானெல்லூர் (திருவள்ளூர் மாவட்டம்): சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது . மேலும் விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவும் முக்கிய ஏவதளமாக உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்): சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் தூரத்திலும், கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிவிமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த இரண்டு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்தாலும், பல சிக்கல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராக்கெட் ஏவுதளம், தாம்பரம் இந்திய விமானப்படை தளம் போன்ற வான்வெளி பகுதி உள்ளதால் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உரிய அனுமதி கிடைக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article