Chennais New Airport: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக கும்மிடிப்பூண்டி இறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் - புதிய இடங்கள்

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் முடிவை கைவிடுவதாக, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதோடு, தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்டு மாநில பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான விமான நிலையத்தை அமைக்கும் பணி முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். அந்த வகையில், இந்த திட்டத்திற்காக இரண்டு புதிய இடங்களை தவெக தலைமையிலான அரசு தேர்வு செய்து, இந்த இடங்களில் ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கோரிக்கையும் விடுத்துள்ளது. இதன் மூலம், அதான் அருகிலேயே சென்னை உள்ளதே என கருதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் திருவள்ளூருக்கு விடிவுகாலம் பிறக்குமா? என்பதே அம்மாஅவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழக அரசு தேர்வு செய்துள்ள புதிய இடங்கள் எவை?

ஏற்கனவே வெளியாகியிருந்த தகவலின்படி, செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு பகுதிகளை, பரந்தூருக்கு மாற்றாக தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியிலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மாநெல்லூர் பகுதியில் சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதனடிப்படையில் வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி இடம் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் (TIDCO) குழு, இந்த் இரண்டு இடங்களிலும் ஏற்கனவே முதல் கட்ட ஆய்வுகளை செய்து முடித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கான புதிய இடங்களின் அமைவிடம் எப்படி?

மாநெல்லூர் பகுதி நகரத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அதோடு, ஆந்திரா முன்மொழிந்துள்ள குப்பம் விமான நிலையத்திற்கு சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செய்யூர் பகுதி புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கூடுதலாக மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள விமான நிலையத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆய்வுகளுக்குப் பிறகு இந்திய விமான நிலைய ஆணையம் இரண்டில் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்தாலும், பல ஒழுங்குமுறை ஆணையங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. முழு வேகத்தில் அனுமதிகள் பெறப்பட்டாலும் திட்டத்தை நனவாக்குவதற்கு குறைந்தது 5 முதல் 6 ஆண்டுகளாகும்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

ஒருவேளை, புதிய விமான நிலையத்திற்கு கும்மிடிப்பூண்டி பகுதி இறுதி செய்யப்பட்டால், திருவள்ளூர் மாவட்டம் பெற்று வந்த தொடர் புறக்கணிப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும் என அம்மாவட்ட மக்கள் கருதுகின்றனர். சென்னைக்கு மிக அருகில் இருந்தும் கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு சார்ந்த துறைகளில் இம்மாவட்டம் போதிய கவனம் பெறுவதில்லை என்ற ஆதங்கம் உள்ளூர் மக்களிடையே பன்நெடுங்காலமாக நீடிக்கிறது. திருவள்ளூர் நகரின் முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் அல்லது மாற்றுப்பாதைகள் இல்லாதது, வடமாநிலங்களுக்கான சாலைவழி சரக்கு போக்குவரத்தால் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளூர் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாதது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லாதது போன்றவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

கும்மிடிப்பூண்டியால் கிடைக்கும் பலன்கள்:

மாநெல்லூர் ஆந்திர மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ளது. இங்கு புதிய விமான நிலையம் அமைந்தால் தமிழ்நாடு உள்ளிட்ட இரண்டு மாநில மக்களும் பயன்பெறுவார்கள். அருகிலேயே வலுவான ரயில் வழித்தடங்களும், கும்மிடிப்பூண்டி மற்றும் ஸ்ரீசிட்டி போன்ற சிப்காட்களும் அமைந்துள்ளதால் சரக்கு போக்குவரத்து மேலும் மேம்படும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இந்த பகுதி அமைந்து இருப்பதால் கூடுதல் செலவுகளை மேற்கொண்டு, சாலை வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆந்திர எல்லை மற்றும் சென்னைக்கு மேலே உள்ள வடமாவட்ட மக்கள் மீனம்பாக்கத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படும். இதனால் நகருக்குள் பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் பயணம் கணிசமாக குறையும், போக்குவரத்து நெரிசலும் மட்டுப்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்: Nirmal Kumar: ”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்

திருவள்ளூருக்கான விடிவு காலம்?

மாநெல்லூர் பகுதி தேர்வு செய்யப்பட்டால் அது திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை வசதிகள், உட்புற கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். விமான நிலையத்தை சார்ந்து தொழில் நிறுவனங்கள், உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி மேம்படுவதோடு, உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உயரும். நிலங்களின் மதிப்பு உயர்வதால் ரியல் எஸ்டேட் தொழிலும் செழிக்கக் கூடும். சென்னை நகரத்துடன் இணைப்பதற்காக மெட்ரோ வழித்தடமும் நீட்டிக்கப்படலாம். இதனால் நெல்லூர் நெடுஞ்சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையக்கூடும். அடிப்படை மற்றும் அவசர வேலைகளுக்கு சென்னையை சார்ந்து இருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும். இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறுமா? என்பது, அடுத்த சில மாதங்களில் இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கப்பட உள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் தெரிய வரும்.

Source: Read Full Article