தஞ்சாவூர்: இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இதை ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளோம். யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் மாதத்திலேயே திறக்க வேண்டிய தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் தாமதமாக வந்தால், விவசாயப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதனால் பயிர்கள் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் வாட்டாள் நாகராஜ் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தமிழர்களையும், கர்நாடக மக்களையும் மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை அரசு சரிசெய்ய வேண்டும் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இதை ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளோம். யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவில் நிலங்கள் தொடர்பான முறைகேடுகளில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கோவில்களில் முன்னுரிமை அளிப்பது வழக்கமான நடைமுறை என்றாலும், அனைவருக்கும் சமமான முறையில் வழிபாட்டு வாய்ப்பு கிடைப்பதை அரசு கண்காணிக்க வேண்டும். முன்னுரிமை அளிப்பது கட்டாயம் இல்லை. காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் .

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த விற்பனையாளர்களை மட்டும் கைது செய்வதால் பயனில்லை. போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டறிந்து அதன் மூலத்தை கட்டுப்படுத்த வேண்டும். போதைப்பொருள் வழக்குகளில் சிக்குபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளியே வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை தேவை. எதிர்கால அரசியல் கூட்டணி குறித்து தற்போதைய சூழ்நிலையை பொறுத்தே முடிவு செய்யப்படும். தேர்தல் முடிந்த உடனேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டோம் .

தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய அளவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய விலை, கொள்முதல் அளவு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாவட்டச் செயலர் தியாக. காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: Read Full Article