தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்வதுடன், சாக்கடை மற்றும் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.எஸ். முகமது இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் குறித்த அச்சம் பொதுமக்களிடம் நிலவி வருகிறது. மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் மற்றும் காலி மனைகளில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தொட்டிகளில் கூடுதல் கவனம்

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும், தொட்டிகளில் பூச்சிகள், மர அட்டைகள், பாசி உள்ளிட்டவை தேங்கி கிடப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் மட்டுமின்றி சமையல், குளியல், துணி துவைத்தல் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கும் இந்த நீரையே பயன்படுத்துவதால், குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாக்கடைகளை அகற்ற வேண்டும்

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள், இறைச்சிக் கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாக்கடை மற்றும் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் வடிகால் பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 2 முறை தொட்டி சுத்தம்; வாரந்தோறும் கொசு ஒழிப்பு

ஊராட்சி செயலாளர்கள், குடிநீர் இயக்குபவர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு பகுதியிலும் டெங்கு தடுப்பு குழுக்களை அமைக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை மாதத்திற்கு 2 முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பகுதிகளிலும் வாரத்திற்கு ஒருமுறை கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சுகாதார நிலையங்களில் நீண்ட நாட்களாக இருப்பில் உள்ள மருந்துகளை ஆய்வு செய்து, காலாவதியான அல்லது பயன்படுத்த முடியாத மருந்துகளை அப்புறப்படுத்தி, தேவையான புதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தை டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் தொட்டிகள், சாக்கடை கால்வாய்கள் மற்றும் தேங்கியுள்ள கழிவுநீர் பகுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Source: Read Full Article