மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரதகம் குமரவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி மீண்டும் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுராந்தகம் தொகுதி மக்களின் மாபெரும் எழுச்சிக்கு நடுவே இடைத்தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார் வெற்றித் தலைவர் அவர்கள். 'மதச்சார்பின்மை, சமூகநீதி, ஊழலில்லாத நிர்வாகம், பெண்கள் பாதுகாப்பு' ஆகிய கொள்கைகளில் எந்த சமரசமும் இல்லாமல், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழக சமூகநீதி நலனுக்குத் தேவையான சாதிவாரி சர்வே கணக்கெடுப்பை எடுக்காமல் கடமை தவறியது திமுக. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்றவுடன் மிகவும் பின்தங்கிய மக்கள், விளிம்புநிலை மக்கள் உட்பட அனைவரின் சமூகநீதி நலனுக்கு அடித்தளமான சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளோம்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாததால், ஆபாச பேச்சுகள், தமிழக மக்கள் மீது இழிவான வசைபாடல்கள், அவதூறு தாக்குதல்கள் ஆகியவற்றை ஒரே வேலையாகச் செய்துவருகிறது திமுக. அத்தகைய திமுக-வின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்கில்கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் செய்த அனைத்து மக்கள் விரோத அரசியலும் அம்பலப்பட்டு நிற்கிறது. குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். ஊழல், முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. 'மக்கள் நலனே முதன்மை' என்று சொல்லும் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில், 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்' வேட்பாளர்கள் இருவரும் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று அடையப்போகும் வெற்றி இதனை மீண்டும் நிரூபிக்கும்” என தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சி வேட்பாளர்கள் யார்?

மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி ராமனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர 17 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article