தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல்:

விஜய் தலைமையில் தவெக ஆட்சியமைத்த பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த இடைத்தேர்தல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக - எதிர்க்கட்சியான திமுக - தொகுதியை பறிகொடுத்த அதிமுக - நாம் தமிழர் - தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் நிறைவு:

இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், வேட்புமனு மீதான ஆய்வு நாளை மறுநாள் நடக்கிறது. வேட்புமனுவைத் திரும்ப பெற வரும் 19ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் நடக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்தி வரும் தவெக-விற்கு இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி மிக மிக முக்கியமானதாக உள்ளது.

கடும் போட்டி:

இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்தினால் அவர்களின் செல்வாக்கை குறைத்து ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான வழியாக அமையும் என்று திமுக வியூகம் வகுத்து வருகிறது. சட்டசபையில் தவெக - திமுக இடையே பெரும் மோதல், வார்த்தைப் போர் நிகழ்ந்ததை தமிழகம் முழுவதும் கவனித்து வந்த நிலையில், அதிமுக இந்த இரண்டு தொகுதிளையும் மீண்டும் தங்கள் வசப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது.

தவெக தரப்பில் ஏற்கனவே இந்த தொகுதியின் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், தாராபுரத்தில் பானுமதி போட்டியிடுகின்றனர்.

பரபரப்புரை தீவிரம்:

இந்த இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. காவல்துறையினர், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய தலைவர்கள் யாரும் இதுவரை இந்த இரு தொகுதிகளுக்கும் பரப்புரைக்குச் செல்லவில்லை.

முதலமைச்சர் விஜய் லண்டனில் இருந்து வந்த பிறகு மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபடுவார் என்று கருதப்படுகிறது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் உடல்நலம் சரியான பிறகு பரப்புரையில் ஈடுபடுவார் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article