தேர்தல் வந்துவிட்டாலே அரசியலை வியாபாரமாக்கும் ஒரு கட்சி என தேமுதிகவை விசிக துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின் கடுமையாக சாடியுள்ளார்.

தவெக அமைச்சரவையில் விசிக

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இடம்பெற்று விசிக 2 தொகுதிகளில் ஜெயித்தது. தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்கும் வகையில் வெற்றி பெற்று பெரும்பான்மை இல்லாமல் தவித்த தவெகவுக்கு ஆதரவு கொடுத்து விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. கூட்டணி ஆட்சி என்பதில் உறுதியாக இருந்த விஜய் விசிகவை முதல்முறையாக அமைச்சர் பதவியில் அமர்த்தினார். அக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற வன்னி அரசு தற்போது சமூக நீதித்துறை அமைச்சராக உள்ளார். தாங்கள் வேண்டாம் என்று சொல்லியும் விஜய் தான் விருப்பப்பட்டு அமைச்சர் பதவி வழங்கியதாக பல மேடைகளில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்தும் விட்டார்.

திமுக கூட்டணியில் ஏற்பட்ட கசப்பு

இதனிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்ல திமுக தவறி விட்டது. நீண்டகாலம் பயணித்த கட்சிகளுக்கு தொகுதியை குறைத்து கொடுத்து திடீரென வந்த கட்சிக்கு எதிர்பாராத தொகுதிகளை கொடுத்தது. இது ஏற்கனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்குமா? என தேமுதிகவை பெயர் சொல்லாமல் மறைமுகமாக சாடியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் கேட்கப்பட்டது.

அமைச்சர் பதவிக்காக அணி மாறிய விசிக

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், “அமைச்சர் பதவி கிடைத்ததால் தானே நீங்கள் அணி மாறினீர்கள்?.. இதுதான் உண்மை.. கம்யூனிஸ்ட்கள் போல வெளியில் இருந்து ஆதரவு என இருந்திருக்கலாமே?.. வென்றது இரண்டு இடங்கள் என்றபோது அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் சென்று விட்டீர்கள். இதற்கிடையில் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள்?.. திமுகவும் அதன் தலைமையும் தான் முடிவெடுக்க வேண்டியது. நாங்கள் எப்படி அதைப்பற்றி கேட்க முடியும்?.. நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்து விட்டு மற்றவர்கள் மீது குறை சொல்வது தவறானது” என பிரேமலதா தெரிவித்தார். இதற்கு விசிக தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

பிரேமலதாவுக்கு விமர்சிக்க தகுதி இருக்கா?

அந்த வகையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின் தேமுதிகவை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேமுதிய பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதை பார்த்தேன். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 107 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது தமிழக வெற்றிக் கழகம். மக்கள் முடிவுகளுக்கு மாறாக திமுகவும் அதிமுகவும் பாஜகவின் இசைவோடு ஆட்சியமைக்க ஒருபக்கம் முயல்வதாகவும் மறுபக்கம் குடியரசு தலைவர் ஆட்சியை பாஜக நிறுவ முயல்வதாக சொல்லப்பட்டன. அந்த இக்கட்டான சூழலில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தோம்.

முதலில் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துவிட்டு பிறகு நீண்ட ஆலோசனைக்கு பிறகு அமைச்சரவையில் பங்கெடுத்தோம். விசிகவின் நகர்வுகள் அனைத்துமே ஜனநாயகப் பூர்வமான முறையிலேயே அமைந்தன. தலித் மக்கள் உரிமைக் குரலாய் ஓங்கி ஒழிக்கும் விசிக அதிகாரத்தில் அமர்ந்தவிட்டன நிலையில் பலரும் கொந்தளிக்கிறார்கள். அந்த வரிசையில் அக்கா பிரேமலதாவும் கொந்தளிக்கிறார். அமைச்சர் பதவிக்காக விசிக தவெக பக்கம் சென்றது என்ற குற்றச்சாட்டை தேமுதிக முன்வைப்பதா.. இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் தகுதி அக்கா பிரேமலதாவுக்கு உண்டா.. தேர்தல் வந்துவிட்டாலே அரசியலை வியாபாரமாக்கி பேரம்பேசும் ஒரு கட்சி 'Loyal Alliance Partner' விசிகவை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article