தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பரப்புரையின்போது விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதில் மிகவும் முக்கியமான வாக்குறுதி தாய்மாமன் தங்க மோதிர திட்ட வாக்குறுதி ஆகும்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்:

பின்னர், தேர்தல் முடிந்த பிறகு ஆட்சிப்பொறுப்பேற்ற விஜய் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவித்தார். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பிற்கு ஏற்ப இன்று தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக, இன்று காலையிலே விமானம் மூலமாக மதுரை செல்கிறார் விஜய். பின்னர், அங்கிருந்து உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மோதிரம் அணிவிக்கும் விஜய்:

பிரசவ வார்டில் உள்ள 25 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தவெக அரசின் மிக முக்கியமான சாதனை திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. பின்னர், மதுரையின் புகழ்பெற்ற மதுரை காந்தி அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அதை திறந்து வைத்து முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிடுகிறார்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இதற்காக நகை செய்யும் ஒப்பந்தங்கள் பிரபல தங்க நகை கடை நிறுவனங்களான ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

1 கிராம் தங்கம்:

இந்த திட்டத்தின் கீழ் புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு 22 காரட் ஹால்மார்க் தரத்திலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளின் கீழ் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மட்டும் 89 ஆயிரத்து 955 தங்க மோதிரங்களை தயாரித்து முதற்கட்டமாக வழங்கியுள்ளது. இந்த மோதிரங்களின் ஹால்மார்க் முத்திரை மட்டுமின்றி 6 இலக்க எச்.யூ.ஐ.டி. எண்ணும் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிகளவு பிரசவம் நடைபெறும் 107 அரசு தாய்சேய் நல மையங்களுக்கு இந்த மோதிரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு:

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜுன் மாதம் 22ம் தேதி முதல் பிறந்த குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூபாய் 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் வருகைக்காக மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Read Full Article