தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் முதியோர்கள் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதனால் பயனடைபவர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

முதியோர்கள் மாதாந்திர ஓய்வூதியம்

தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்த ஆதரவற்ற முதியோர், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. முன்னால் ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் 2023ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த உதவித்தொகை ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டது. இந்த பணமானது பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்தது. இந்த பணமானது ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்குள் வங்கியில் செலுத்தப்பட்டு வந்தது.

தாமதமாகும் ஓய்வூதியம்

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வங்கியில் வரவு வைக்க வேண்டிய முதியோர் ஓய்வூதியத் தொகை இதுவரை வரவு வைக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இந்த மாதத்திற்கான ஓய்வூதியத் தொகை கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கிட்டதட்ட 5 லட்சம் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நிதி நிலைமையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தாலும் மாதம் மாதம் செலுத்தப்படும் உதவித்தொகை சில மாதங்களில் தாமதமாக வரவு வைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் மாதந்தோறும் உணவு, மருத்துவம் போன்ற தேவைகளை நம்பி ஓய்வூதியத்தை நம்பியுள்ள முதியவர்கள் பணம் கைக்கு கிடைக்காததால் கடும் அவதியடைந்துள்ளனர்.

எப்போது ஓய்வூதியம் வரும்?

இந்த ஓய்வூதியம் சில பேருக்கு மட்டும் மணி ஆர்டர் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் தாமதமான ஓய்வூதியம் வரும் 15ம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வங்கி ஊழியர்கள் போராட்டம், இன்று 2வது சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் பணம் செலுத்தும் நடைமுறை மேலும் தாமதமாகியுள்ளது.

தொடர் விடுமுறை, பண்டிகைகள் வருவதால் இந்த பணம் உதவியாக இருக்கும் என நினைத்தால் இப்படி நடக்கிறதே என பலரும் தவித்து வருகின்றனர். அதேசமயம் அதிகாரிகள் தரப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் சரியாகி விடும். ஒரே கட்டமாக பணம் வரவு வைக்கப்பட்டுவதால் சரிபார்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் சாப்ட்வேர் மாற்றும் பணி நடைபெற்று வருவதால் தாமதம் நடந்துள்ளதாக, அடுத்த வாரத்திற்குள் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article