விழுப்புரம் : மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவைகள் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவைகள் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், பருவமழை சூழ்நிலையில் பொதுமக்களுக்கு டெங்கு, சிக்குன்குனியா, எலிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் மழைக்காலத் தொற்று நோய்களான டைபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறையின் மூலமாக நோய் கண்காணிப்புப் பணிகள், கொசுப்புழு ஒழிப்புப் பணிகள், புகை மருந்து அடிக்கும் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள், புகை மருந்து அடிக்கும் பணிகள், தினசரி குளோரினேசன் செய்து குடிநீர் வழங்கும் பணிகள், குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்யும் பணிகள் போன்ற நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு சிக்குன்குனியா போன்ற நோய்கள் நல்ல தண்ணீரில் பெருக்ககூடிய ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த ஏடிஸ் கொசுவானது (Ades mosquito) பகல் நேரத்தில் மட்டும் கடித்து நோய் கிருமிகளை பரப்பும் மற்றும் சுமார் 100 முதல் 400 மீட்டர் சுற்றளவு தூரம் மட்டும் பறக்கக்கூடியது. இதனை தடுக்க பொதுமக்கள் வீட்டில் நல்ல தண்ணீர் மற்றும் மழை நீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்களை மூடி வைக்க வேண்டும். தொட்டி டிரம்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு பிரஸ் அல்லது தேங்காய் நார் கொண்டு தேய்த்து கழுவி காயவைத்த பின்னர் உபயோகிக்க வேண்டும். வீட்டைச்சுற்றிலும் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக், உபயோகப்படுத்தப்படாத டயர், தேங்காய் மட்டைகள், சிரட்டைகள், உடைந்த மண்பாண்டங்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உபயோகப்படுத்தாத ஆட்டு உரல்களை கவிழ்த்து வைக்க வேண்டும். நீர் சேமித்து வைக்கும் டிரம் மற்றும் அண்டாக்களை மூடி வைக்க வேண்டும் அல்லது கிழியாத துணியால் வேடுகட்டி வைக்க வேண்டும். குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். வீட்டின் கதவு ஜன்னல்களை கொசு புகாமல் கொசுவலை அடித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது வீட்டில் உள்ள நீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்து விட்டும் தொட்டிகளில் உள்ள நீரை வெளியேற்றி சுத்தம் செய்து விட்டும் செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க முழுக்கால் சட்டை மற்றும் முழுக்கை சட்டை அணிவித்தும், உறங்கும்போது கொசுவலை பயன்படுத்தியும் கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும். வீட்டைச்சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவு பொருட்களை எலிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குளிர்சாதனப்பெட்டியின் பின்புறமுள்ள டிரேயை வாரம் ஒருமுறை சுத்தம் செய்யவேண்டும் அல்லது உப்பு எண்ணெய் சிறிது ஊற்றி கொசுப்புழு உற்பத்தியாகாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அலங்கார தொட்டிகள் சலவை இயந்திரம் பூப்தொட்டிகளில் உள்ள தண்ணீரை வாரம் ஒருமுறை மாற்றுவதன் மூலம் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க முடியும். கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்கு வீடுகளுக்கு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலின் பொழுது காய்ச்சல், உடல்வலி, தசை, மூட்டு மற்றும் எலும்பு வலி, கடுமையான தலைவலி, அதிக சோர்வு, தோலில் சிவப்பு தடிப்புகள், வாந்தி மற்றம் வயிற்று வலி ஆகியவை டெங்குவின் அறிகுறிகளாகும். காய்ச்சல் உள்ளபோது வாந்தி, வயிற்றுவலி, இரத்தக்கசிவு, மயக்கம், சிவந்த தடிப்புகள், மூச்சுத்திணறல், மலம் கருப்பாக வெளியேறுதல் போன்றவை அபாய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடம்பிலுள்ள நீர்ச்சத்துக்களின் அளவு குறையாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு ORS கரைசலை தகுந்த அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கமுடியும். காய்ச்சல் உள்ள சமயங்களில் கடினமான வேலைகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றைத் தவிர்த்து போதுமான அளவு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். பாதிப்புகள் உள்ள சமயத்தில் மருத்துவரின் உரிய ஆலோசனையின்றி பொதுமக்கள் சுய மருத்துவம் செய்தல் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலோ அல்லது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் முதலான இடங்களிலோ காய்ச்சல் அல்லது ஏதேனும் தொற்றுநோய்கள் அதிகம் காணப்பட்டால் அதுகுறித்த தகவல்களை உடனடியாக அப்பகுதியிலுள்ள சுகாதாரக் களப்பணியாளர்கள் அல்லது துணை சுகாதார நிலையங்கள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறும், காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு மேற்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

Source: Read Full Article