"திருமணம் செய்ய வற்புறுத்தல்"

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் , சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். அதே மருந்தகத்தின் பொறுப்பாளராக வளசரவாக்கத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ரஞ்சித்குமார் என்பவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரஞ்சித்குமார் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் , அந்த இளம்பெண் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் , ரஞ்சித்குமாரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும் தெரிவித்ததாக தெரிகிறது.

"இளம் பெண்ணின் புகைப்படங்களை வைத்து மார்பிங்"

அந்த இளம் பெண்ணின் புகைப்படங்களை தனது செல்போனில் சேமித்து வைத்திருந்த ரஞ்சித்குமார்., அவற்றை மார்பிங் செய்து , தானும் அந்த பெண்ணும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை உருவாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த புகைப்படங்களை இளம்பெண்ணிடம் காண்பித்து , தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

ரஞ்சித் குமாரின் தொடர் தொல்லை காரணமாக , அந்த இளம் பெண் மருந்தகத்தில் இருந்த தனது வேலையை விட்டு நின்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரஞ்சித்குமார் அவரை விடாமல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

மேலும், அந்த இளம் பெண்ணையும் அவரது காதலனையும் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் , இல்லையெனில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

"காவல் நிலையத்தில் இளம் பெண் புகார்"

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் , ரஞ்சித்குமார் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதும் , அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்துக் கொண்டு மிரட்டியதும் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து ரஞ்சித்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை டெலிட் செய்தனர். மேலும் வேறு பிரதிகள் உள்ளனவா, அவற்றை வேறு யாரிடமும் பகிர்ந்துள்ளாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article