மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருப்பது அதிமுக தரப்பை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இடைத்தேர்தல்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை ஓரம் தள்ளி புதிதாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்கு முன் அந்த கட்சியை விமர்சித்த மற்ற கட்சிகளில் இருந்தவர்கள் தவெக பக்கம் அரசியல் எதிர்காலம் கருதி தாவினர். இந்த நிலையில் அரசியல் களத்தில் பரம எதிரிகளாக அறியப்பட்ட திமுக - அதிமுக கூட்டு சேர்ந்து தவெகவுக்கு எதிராக ஆட்சியமைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என தெரிவித்து தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.

இதனிடையே தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9ம் தேதி எண்ணப்படுகிறது. இருதொகுதிகளிலும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. தவெக அரசின் முதல் இடைத்தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

களத்தில் மோதும் வேட்பாளர்கள்

மதுராந்தகத்தில் திமுக சார்பில் பரந்தாமன், தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் களம் காண்கின்றனர். அதேசமயம் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

கைவிரித்த அன்புமணி ராமதாஸ்

இதனிடையே எப்படியாவது இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தவெகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என திமுக, அதிமுக ஆகிய இருதரப்பும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு தொகுதிகளிலும் தனித்தொகுதி என்றாலும் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுராந்தகத்தில் வன்னியர் சமூக மக்களின் வாக்கு பெருமளவில் உள்ளது. இப்படியான நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர் சமுதாய மக்களின் வாக்கு வங்கியாக அறியப்படும் பாமக, தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக தலைமையின் கீழ் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இதில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் பாமக ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலையளவு நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் அன்புமணியின் முடிவோ எதிராக அமைந்ததில் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க தவெக முயற்சிப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அப்படியான நிலையில் அதிமுகவுக்கு கூட ஆதரவு இல்லை என சொல்வது இது அந்த புது கூட்டணிக்கான மறைமுக சிக்னலா என அரசியல் நிபுணர்கள் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Source: Read Full Article