மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம், பியோரா பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான பிஎஸ்சி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி. சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி (Bittu Tabahi) என அறியப்படும் இவர், அப்பகுதி மக்களால் கைவிடப்பட்டு கடும் மாசடைந்திருந்த அஜ்னார் ஆற்றை (Ajnar) தனி ஆளாகச் சுத்தப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவரது இந்தச் செயலைப் பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நீண்டகாலக் காத்திருப்பை விடுத்து, கடந்த 2026 ஜனவரி 26 சுதந்திர தினத்தன்று இந்த ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியை இவர் நேரடியாகத் தொடங்கினார்.

அப்போது அந்த ஆறு பிளாஸ்டிக் கழிவுகள், காலி தண்ணீர் பாட்டில்கள், பாசிகள், வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பிற குப்பைகளால் நிரம்பி, தண்ணீரே கண்ணுக்குத் தெரியாத அளவுக்குக் குப்பை மேடாகக் காட்சியளித்தது.

அரசு நடத்தும் தூய்மைப் பணிகளைப் போல பெரிய இயந்திரங்களை நம்பாமல், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சாதாரணக் கருவிகளைக் கொண்டு அசுத்தமான ஆற்று நீரில் இறங்கித் தனது கைகளாலேயே கழிவுகளை இவர் அகற்றினார். நீரோட்டத்தை சீராக்க ஆற்றங்கரைகளில் இருந்த அடைப்புகளையும் சரிசெய்தார்.

30 ஆயிரம் ரூபாய் செலவு

ஆரம்பத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து பணம் திரட்டி குப்பைத் தொட்டிகள் மற்றும் தூய்மைப் பணிக்கான கருவிகளை வாங்கியுள்ளார். மேலும், ஆற்றில் வீசப்பட்ட வழிபாட்டுப் பொருட்களைச் சேகரித்து மீண்டும் ஆற்றில் கலக்காதவாறு உரமாக மாற்றினார். இதுவரை இப்பணிக்காக சுமார் ரூ.30,000 வரை சொந்தமாகச் செலவு செய்துள்ளார்.

இந்தப் பயணத்தில் அவர் பல சவால்களைச் சந்தித்தார். சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகவே அவர் இதைச் செய்வதாக உள்ளூர் மக்கள் பலரும் அவரைக் கேலி செய்தனர். அசுத்தமான நீரில் தொடர்ந்து வேலை செய்ததால் அவரது கை, கால்களில் தோல் தொற்று மற்றும் அரிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டன. இருப்பினும் மனம் தளராமல் பல மாதங்களாக இப்பணியைத் தொடர்ந்தார்.

வைரலான புகைப்படங்கள்

இவரது விடாமுயற்சியின் விளைவாக, குப்பைக் கால்வாய் போல் காட்சியளித்த அஜ்னார் ஆற்றின் பல பகுதிகள் தற்போது சுத்தமான நீர்நிலையாக மாறியுள்ளன. தூய்மைப் பணிக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன.

இவரது இந்தத் தீர்க்கமான முடிவைப் பாராட்டிய ஆனந்த் மகிந்திரா, பிட்டுவைப் புகழ்ந்துள்ளார். அதேபோல பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உள்ளிட்டவர்களும் பிட்டுவைப் பாராட்டித் தள்ளியுள்ளனர்.

Source: Read Full Article