சரியான நேரத்தில் சரியான இடத்தில் சேர்ந்ததால் இன்று அமைச்சராகி இருக்கிறேன் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்த தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்தார். இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சத்யபாமாவை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “நான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சேர்ந்ததால் இன்று அமைச்சராகி இருக்கிறேன்.எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவில் இருந்து நீக்காவிட்டால் நான் தவெகவுக்கு வந்திருக்க இயலாது. சட்டமன்றத்தில் எனக்கு எதிராக அவரை உட்கார வைத்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி என் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் தலை குனிந்தபடி இருக்கிறார். இபிஎஸ் வெட்கப்படுகிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவர் ஜெயலலிதாவோடு பயணித்த நான் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் பயணிக்கிறேன்.

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என எம்ஜிஆர் பாடினார். எடப்பாடி பழனிசாமி, தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு செய்த கொடுமையை விவரிக்க முடியாது. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது நாங்கள் எங்கேயாவது திமுககாரர்களை கண்ணால் பார்த்தாலே போதும். அவ்வளவு தான். அடுத்த நாளே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி தான் வரும். அப்படிப்பட்ட தலைமைக்குப் பின்னால், அவர் வளர்த்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்தார்.

திமுகவுடன் கூட்டணி வைத்து 47 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு முதலமைச்சர் ஆகி விடலாம் என சதி திட்டம் தீட்டிய எடப்பாடி பழனிசாமிக்கு சவுக்கடி கொடுத்தவர் தான் சத்யபாமா. அவர் செய்த காரணத்தால் முன்னாள் அமைச்சர்கள் பலரின் கட்சி பதவியை பறித்து விட்டார். உடுமலை ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோற்று விட்டோம் என சோகத்தில் வீட்டில் இருந்தார். எந்த கட்சியிடமும் அவர் செல்லவில்லை. அவரை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி விட்டார்.

மீண்டும் 2,3 பதவி தருகிறேன், வா என இபிஎஸ் அழைத்தும் உடுமலை ராதாகிருஷ்ணன் தவெகவில் வந்து சேர்ந்து விட்டார். நானெல்லாம் 9 முறை ஜெயித்து எடப்பாடி பழனிசாமியை அடையாளம் காட்டிய என்னையெல்லாம் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்து விட்டார். இந்த அரசியல் வாழ்க்கையில் என்ன செய்வதென்று தடுமாறினேன். அப்போது கைகொடுத்து என்னை தூக்கி விட்டு வருவாய்த்துறை அமைச்சராக மாற்றியவர் விஜய். அவரோடு தான் உயிர் இருக்கும் வரை பயணம் செய்வேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Source: Read Full Article