தஞ்சாவூர்: தஞ்சையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ரேவதி தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்: தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எந்தவித நிபந்தனையும் இன்றி கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க விதை கரும்புகளை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். குறுவை பொய்த்து விட்டது. சம்பாவும் கேள்விக்குறியாகி உள்ளது. மேட்டூர் தண்ணீரைக் கொண்டு நடவுப் பணியை தொடரலாமா ? வேண்டாமா என்பதை மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.

நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமதுஇப்ராஹிம்: இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தற்போதைய திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் போதாது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக நீதிமன்றங்கள் மற்றும் காவிரி ஆணையத்தின் வழியாக தண்ணீர் பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுவதையும் பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசே பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனங்களை நடத்த வேண்டும். பாபநாசம், திருவையாறு ,அம்மாபேட்டை பகுதியில் நவீன நெல் கொள்முதல் குடோன்களை திறக்க வேண்டும்.

தங்கவேல்: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து ஒரு மாதம் காலம் ஆகி உள்ளது. ஆனால் கல்லணை கால்வாய் இருந்து தண்ணீர் இருந்தும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. இதேபோல் நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரி குளங்களிலும் தண்ணீர் இல்லாததால் கால்நடைகளும் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதி அடைந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றோம். எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர விமலநாதன்: குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து துறை செயலாளர்களை அழைத்து உரிய ஆலோசனை நடத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர்கள் உள்ளார்கள். எனவே தகுதியானவர்களை சங்க உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமங்களில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சிறப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது, புதிய தலைமைச் செயலகம் கட்டுவது என்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உணர்த்துவதற்கு உலர் களம் இல்லாமல் உள்ளது. எனவே அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் உலர் களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரை ரமேஷ்: திருவையாறு தஞ்சாவூர் வட்டார பகுதிகளான வெள்ளம் பெரம்பூர், உமையவன் ஆற்காடு, தென்பெரம்பூர், அம்மன் பேட்டை, நாகத்தி பகுதிகளில் விவசாயிகள் குருவை சாகுபடி செய்திருந்த நிலங்களில் பயிர்களை வன பறவைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 80 ஏக்கர் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகள் விலை நிலங்களை நேரடியாக கள ஆய்வு செய்து விவசாயிகளிடம் விசாரணை செய்து இழப்பீடு வழங்க தேவையான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். ஆனால் இதுவரை அதற்கான இழப்பீடு தொகை வழங்கவில்லை. எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

விவசாயிகள் சங்கத் தலைவர் ரவிசந்தர்: விவசாயிகளின் பயிர் கடன் தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் , பதிவாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையான அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மருத்துவ முகாம்கள் அமைத்து டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும். சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும். உரத்திற்கான மானிய சலுகை விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

பெரமூர் அறிவழகன்: பாசனத்திற்கு தண்ணீர் வருமா? வராதா ? என்ற அச்சத்துடன் சம்பா சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு சம்பா தொகுப்பு வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் . உணவகங்களில் வாழை இலை பயன்படுத்திட வேண்டும் . திருவையாறு பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அரசின் மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது விவசாயிகள் பதிவேட்டில் உள்ள சர்வே எங்களை மட்டுமே கொண்டு விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. அரைகுறையாக பதிவிறக்கம் செய்த எப்ஆர் பதிவேட்டில் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்து முடிக்கும் வரை பழைய நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

தொடர்ந்து கலெக்டர் ரேவதி டெங்கு காய்ச்சல் குறித்து பதில் அளித்து பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் இரண்டு பேர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலையும் சீராக உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து தினமும் மாலை மருத்துவ அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். எனவே பொதுமக்களும் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. விவசாயிகளாகிய நீங்களும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், மின்வாரிய மேற் பொறியாளர், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர், வேளாண்மை துறை இணை இயக்குனர், தோட்டக்கலை துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Source: Read Full Article