மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்திற்கு ரயில்வே துறை விரிவான ஏற்பாடுகள்.

மெமு' சிறப்பு ரயில்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் செப்டம்பர் 17 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இதற்காக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் விரிவான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு ரயில்கள், பயணிகள் வசதிகள், கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு, தூய்மையான வளாகம், மருத்துவ உதவி ஆகிய அம்சங்கள் இந்த ஏற்பாடுகளில் அடங்கும். பயணிகளின் வசதிக்காக ஆறு கும்பாபிஷேக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை காட்பாடி, சேலம், கரூர் வழியாக சென்னை சென்ட்ரல் - மதுரை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், விழுப்புரம் விருத்தாச்சலம் வழியாக தாம்பரம் - மதுரை - தாம்பரம் சிறப்பு ரயில், சென்னை கடற்கரை - மானாமதுரை - சென்னை கடற்கரை முன்பதிவு இல்லாத 'மெமு' சிறப்பு ரயில்கள் ஆகும்.

கண்காணிப்பு, டிரோன் மூலம் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும்

மேலும் தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக திருநெல்வேலி - கூடல் நகர், ராமேஸ்வரம் - பழனி, போடிநாயக்கனூர் - கூடல் நகர் ஆகிய ரயில் நிலையங்கள் இடையேயும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உதவிட ஏற்கனவே உள்ள விசாரணை மையத்துடன் நடைமேடை எண் ஒன்றில் மேலும் ஒரு சிறப்பு பயணிகள் உதவி மையம் செயல்படுகிறது. முதியவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோரின் வசதிக்காக பேட்டரி கார் வசதியுடன் கூடுதலாக சக்கர நாற்காலிகளும் தயாராக உள்ளன. மதுரை ரயில் நிலையத்தின் தூய்மையை மேம்படுத்த கூடுதலாக 75 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் நிலையத்திற்குள் உள்ளே செல்ல மற்றும் வெளியே செல்ல தனித்தனியாக வழிகள் அமைத்து பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படை உதவி மையமும் செயல்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சிசிடிவி கேமரா கண்காணிப்பு, டிரோன் மூலம் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்

ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் பகுதியில் 3000 பயணிகளும் மேற்கு பகுதியில் 500 பயணிகளும் பயன்படுத்தும் வகையில் காத்திருப்பு பகுதிகள் உள்ளன. இரண்டு நடமாடும் கழிப்பறைகள், கூடுதலாக குடிநீர் குழாய்கள், தானியங்கி பயண சீட்டு வழங்கும் இயந்திரங்கள், போன்றவையும் நிறுவப்பட்டுள்ளன. ரயில்வே ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் ரயில்வே மருத்துவக் குழு, புனித ஜான் ஆம்புலன்ஸ் படை மற்றும் தமிழக அரசு மருத்துவ குழு ஆகியவையும் செயல்படுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள மூன்று மின் தூக்கிகள், நான்கு எஸ்கலேட்டர்கள் தொடர்ந்து செயல்பட ஜெனரேட்டர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பயணங்களை முன்பே திட்டமிடவும், உதவி மையங்களையும் மற்றும் குறிப்பிடப்பட்ட காத்திருப்பு பகுதிகளையும் பயன்படுத்தவும், கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும் அறிவுக்றுத்தி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Source: Read Full Article