கோவில் நகரம் மற்றும் பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் நகரை மேலும் அழகுப்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சந்திப்புகளில் சிறு பூங்காவுடன் கூடிய ரவுண்டானா மற்றும் போக்குவரத்து தீவு (Traffic Island) அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நகரின் அழகை மேம்படுத்துவதுடன், முக்கிய சந்திப்புகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாகவும் இது அமைய உள்ளது.

11 இடங்களில் ரவுண்டானா மற்றும் போக்குவரத்து தீவு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 11 முக்கிய இடங்கள் ரவுண்டானா மற்றும் போக்குவரத்து தீவு அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. பொன்னேரிகரை மேம்பாலம் ஏறுமிடம், அன்னை இந்திரா காந்தி சாலை, ஏகாம்பரநாதர் கோவில் சந்திப்பு, ஒலிமுகமதுபேட்டை சந்திப்பு, செவிலிமேடு சந்திப்பு, ஓரிக்கை மிலிட்டரி ரோடு சந்திப்பு, இரங்கசாமி குளம் சந்திப்பு, பெரியார் நகர் சந்திப்பு, சங்கரமடம் சந்திப்பு, பூக்கடை சத்திரம் சந்திப்பு மற்றும் இரயில்வே ரோடு மீன்மார்க்கெட் அருகே உள்ள பகுதி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

5 இடங்களுக்கு அனுமதி

இந்த 11 இடங்களில், ஐந்து இடங்களில் ரவுண்டானா அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பொன்னேரிகரை புதிய ரயில்வே நிலையம் ஜங்ஷன், அன்னை இந்திரா காந்தி சாலை, ஒலிமுகமதுபேட்டை ஜங்ஷன், இரங்கசாமி குளம் ஜங்ஷன் மற்றும் சங்கரமடம் ஜங்ஷன் ஆகிய ஐந்து முக்கிய இடங்களில் ரவுண்டானா அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் நகரின் போக்குவரத்து நிலை, சாலை அமைப்பு மற்றும் பொதுமக்களின் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரவுண்டானா மற்றும் அதனுடன் இணைந்த சிறு பூங்கா அல்லது பசுமைப் பகுதி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நகரின் முக்கிய சந்திப்புகள் புதிய தோற்றம் பெறும்

ரவுண்டானாக்களின் மையப்பகுதியில் சிறு பூங்கா அமைப்பது, காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளுக்கு பசுமையான தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். மேலும், போக்குவரத்து தீவுகள் முறையாக அமைக்கப்படுவதன் மூலம் சந்திப்புகளில் வாகனங்கள் செல்லும் பாதைகளை ஒழுங்குபடுத்தவும், சாலையின் மையப்பகுதிகளை முறையாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, நகரின் முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது. அதே நேரத்தில், நகரின் வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு ஏற்ற வகையில் சாலைகள் மற்றும் சந்திப்புகளின் தோற்றத்தையும் மேம்படுத்தும் முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏராளமான பழமையான கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் பாரம்பரிய பட்டு நெசவு ஆகியவற்றால் நகரம் தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கிய ஆன்மீகத் தலங்களை காணவும், வழிபடவும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரம் வருகின்றனர்.

அதேபோல், உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை வாங்குவதற்காகவும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நகருக்கு வருகை தருகின்றனர். திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கான பட்டுப்புடவைகள் வாங்குவதில் காஞ்சிபுரம் முக்கியமான வணிக மையமாக திகழ்கிறது.

மாநகராட்சியின் அழகுப்படுத்தும் முயற்சி

காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், நகரின் அடிப்படை வசதிகள், சாலை மேம்பாடு, தூய்மை, பசுமை மற்றும் நகரின் தோற்றத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா மற்றும் சிறு பூங்காக்கள் அமைக்கும் இந்த முயற்சி நகரின் ஒட்டுமொத்த தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைய உள்ளது.

கோவில் நகரம், பட்டு நகரம் என்ற பெருமையை கொண்ட காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் சந்திப்புகளை அழகுபடுத்துவதன் மூலம், காஞ்சிபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையிலும் நகரின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த திட்டம் அமைய உள்ளது.

Source: Read Full Article