மதுரை மேற்கு தொகுதியில் தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மீது அடுக்கடுக்கான சர்ச்சைகள்.*

எம்எல்ஏ எஸ்.ஆர்.தங்கபாண்டியன்

மதுரை மேற்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ எஸ்.ஆர்.தங்கபாண்டியன் மீதான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பதவி விற்பனை புகார், வசூல் ராஜ்ஜியம், பிறந்தநாள் கொண்டாட்டம், தொண்டர்களையே மிரட்டும் போக்கு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், விசில் சின்னத்தை பார்த்து வாக்களித்து விட்டோமோ என தொகுதி மக்கள் புலம்பி வருகின்றனர் என்ற கருத்து வெளியாகி உள்ளது.

தங்கபாண்டியன் மீது சர்ச்சை

மதுரை மேற்கு தொகுதி 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று. ஆனால் வெற்றி பெற்ற 3 மாதத்திற்குள்ளாகவே அந்த தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.தங்கபாண்டியன் மீது சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் விளாங்குடி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமை தொடங்கி வைக்க சினிமா பாணியில் காரில் அணிவகுத்து வந்தார் எம்எல்ஏ தங்கபாண்டியன். அப்போது அங்கு கூடியிருந்த தவெக தொண்டர்களே அவரது காரை முற்றுகையிட்டு, கட்சியில் புதிதாக வந்தவர்களுக்கு பதவி கொடுப்பதா? என சரமாரி கேள்வி எழுப்பி பதவி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேற கட்சியிலிருந்து வந்தவங்களுக்கு உடனே பதவி கொடுக்குறீங்க, தேர்தல்ல உங்களுக்காக வேலை பார்த்து ஜெயிக்க வச்ச எங்களுக்கு பதவி இல்லையா? என்று தொண்டர்கள் கேள்வி எழுப்பினர்.

தங்கபாண்டியன் மீது பரபரப்பு புகார்

ஆனால் காரை விட்டு இறங்க மறுத்த எம்எல்ஏ, இங்க பேசக்கூடாது, மனுவா கொடுங்க, வீடியோவை கட் பண்ணுங்க என்று மிரட்டும் தொனியில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. செய்தியாளர்களையும் வீடியோ எடுக்க விடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இறுதியில் பதில் சொல்லாமல் காரில் சர்ரென புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு முன்பாக மார்ச் 2026-ல் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்கபாண்டியன் மீது பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

தலா 10 ஆயிரம் ரூபாய் வசூல்

புகார் அளித்தவர் தவெக பெண் நிர்வாகி ஷர்மிளாவின் கணவர் பாலாஜி. தவெகவில் மகளிர் அணி மாநில, மாவட்ட பதவி வாங்கி தருவதாக கூறி பல தவணைகளாக 26 லட்சம் ரூபாய் வரை தங்கபாண்டியன் பெற்றதாகவும், பணத்தை பெற்ற பிறகு பதவி வழங்காமல் ஏமாற்றியதாகவும், பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சி மாநாடு, பொதுக்கூட்டங்களில் பெண் நிர்வாகிகளை மேடை ஏற்ற தலா 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் புகார்தாரர்கள். எம்எல்ஏ ஆன பிறகு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ரேஷன் அரிசியை வழங்கியது, பழங்காநத்தத்தில் நடந்த விழாவில் கூட்ட நெரிசலில் பெண்கள் மயங்கி விழுந்தபோது கண்டுகொள்ளாமல் சென்றது, விளாங்குடி பகுதியில் சாலையை மரித்து நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக விழா நடத்தியது என தொடர் சர்ச்சைகளில் சிக்கினார்.

நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்

சமீபத்தில் அவரது பிறந்தநாள் விழாவை நடுரோட்டில் கேக் வெட்டி, மேள தாள ஊர்வலத்துடன் பொதுமக்களுக்கு இடையூறாக கொண்டாடியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அமைச்சர் கூட இல்லாத ஒரு எம்எல்ஏவிற்கு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று விமர்சனம் எழுந்தது. இதற்கெல்லாம் மேலாக தொகுதி முழுவதும் கமிஷன், மாமூல், பஞ்சாயத்து என தனி வசூல் சாம்ராஜ்யம் நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு பின்னணியில் ரவுடியிச பின்னணி இல்லாமல் 3 மாதத்தில் இதெல்லாம் சாத்தியமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். சாதாரண மக்களுக்கு தான் பதவி என்று சொன்ன தவெகவில், இன்று பொறுப்பில் இருப்பவர்கள் பின்னணி என்னவென்று தெரியவில்லை என்றும், வேட்பாளர் பெயர் கூட தெரியாமல் விசில் சின்னத்திற்காக ஓட்டு போட்டு விட்டோமோ என்றும் மக்கள் புலம்பி வருகின்றனர். மூன்று மாதத்திலேயே மூச்சு முட்டுகிறது என்றால் 5 வருடங்கள் எப்படி இருக்கும், தவறு செய்யும் எம்எல்ஏ மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?, அது தானே உண்மையான மாற்றம் என்று மதுரை மேற்கு மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்எல்ஏ தங்கபாண்டியன் என்ன விளக்கம் அளிக்க போகிறார், தலைமை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Source: Read Full Article