வீட்டில் வெளியான துர்நாற்றம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர் சாமி புரத்தில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்ச வள்ளி ( வயது 38 ) கடந்த 9 - ம் தேதி மகன் , மகள் கல்லூரிக்கு சென்ற பிறகு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால் , 2 தினங்களுக்கு முன் மகள் பெரிய குளம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து அம்ச வள்ளியை தேடி வந்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் கடைசியாக தேனியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.

இந்நிலையில் தேனி அருகே , பழனிசெட்டிப்பட்டி சவுடேஸ்வரி நகரில் குடியிருக்கும் புரோட்டா மாஸ்டரான அப்துல் ரகுமான் ( வயது 36) என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீசாரும், செல்போன் ஆய்வு தொடர்பாக பெரியகுளம் போலீசாரும் அப்துல் ரகுமான் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீடு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அப்துல் ரகுமான் இருந்தார். அவர் அருகே சாக்கு மூட்டையில் அம்சவள்ளி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். போலீசார், அம்ச வள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து அப்துல் ரகுமானை கைது செய்தனர். எஸ்பி பிரவின் கவுதம் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது குறித்து போலீசார் கூறுகையில் ;

அப்துல் ரகுமானுக்கு செல்போன் மூலம் அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. கடந்த 9 - ம் தேதி அம்சவள்ளி, அப்துல் ரகுமான் வீட்டிற்கு வந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான் அருகில் இருந்த கல்லால் அவரது தலையில் பலமாக தாக்கியதில் உயிரிழந்தார். யாருக்கும் தெரியாமல் வெளியே கொண்டு போய் வீசி விடலாம் என நினைத்து, சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளார். தெருவில் ஆள் நடமாட்டம் இருந்ததாலும் , எங்கே கொண்டு செல்வது என தெரியாமலும் வீட்டிலேயே பிணத்துடன் இருந்தது தெரிய வந்தது என கூறினர்.

Source: Read Full Article