விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விவசாய நிலங்களில் இருந்து தொடர்ந்து மின்சார வயர்கள் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான மின்சாதனங்கள் திருடப்பட்டு வந்த நிலையில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்களவாய் ஊராட்சிக்கு உட்பட்ட வைரம்பேட்டை கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் மின்மோட்டார்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர்கள் மற்றும் சாட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் மர்மமான முறையில் திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ராமச்சந்திரன், முத்து, மணிகண்டன், கேசவன், தட்சிணாமூர்த்தி ஆகியோரது விவசாய நிலங்களில் இருந்து மின்சார வயர்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மின்சார வயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சந்தேகமாக சுற்றிய 3 பேர்

இந்நிலையில், வைரம்பேட்டை கிராமப் பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிவதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர். தொடர்ந்து அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், கிராம மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, விவசாய நிலங்களில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மின்சார வயர்களை ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை எடுத்துச் செல்வதற்காக வந்தபோது பொதுமக்களிடம் சிக்கியதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கிராம மக்கள் 3 பேரையும் பிடித்து மயிலம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

3 பேரிடம் போலீசார் விசாரணை

இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் ஜக்காம்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த விஜி (38), வேல்முருகன் (41), ராஜதுரை (21) என்பது தெரியவந்தது.

மேலும், விவசாய நிலங்களில் நடைபெற்ற மின்சார வயர்கள் திருட்டு சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு விவசாயிகளின் நிலங்களில் மின்சார வயர்கள் திருடப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 3 பேரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் ஏதேனும் மீட்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் அச்சம்

விவசாய நிலங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வயர்கள் திருடப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மீண்டும் புதிய வயர்கள் பொருத்துவதற்கும் கூடுதல் செலவு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களின் துரித நடவடிக்கையால் சந்தேகத்திற்கிடமான 3 பேர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, மேலும் எத்தனை விவசாய நிலங்களில் திருட்டு நடந்துள்ளது என்பது குறித்தும் மயிலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article