சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான பாதை 4 (Corridor 4) வழித்தடத்திற்காக ஆர்டர் செய்யப்பட்ட புதிய மெட்ரோ ரயில்கள் தொடர்ந்து சென்னை வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள இரண்டாம் கட்ட திட்டத்திற்காக, தலா மூன்று பெட்டிகள் கொண்ட 138 மெட்ரோ ரயில்கள் மூன்று தொகுப்புகளாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

பூந்தமல்லி பணிமனைக்கு வந்த 35 ரயில்கள்

முதல் தொகுப்பில் மொத்தம் 36 ரயில்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் 35 ரயில்கள் ஏற்கனவே பூந்தமல்லி மெட்ரோ பணிமனைக்கு வந்து சேர்ந்துள்ளன. மீதமுள்ள ஒரு ரயிலும் ஓரிரு நாட்களுக்குள் பூந்தமல்லி பணிமனைக்கு வந்து சேரும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் முதல் தொகுப்பில் ஆர்டர் செய்யப்பட்ட 36 ரயில்களும் விரைவில் CMRL வசம் முழுமையாகக் கிடைக்க உள்ளன.

பூந்தமல்லி பணிமனைக்கு ரயில்கள் வந்தடைந்த பிறகு, அவை உடனடியாக பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு ரயிலும் பல்வேறு கட்டங்களில் விரிவான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது முதல் தொகுப்பில் உள்ள ரயில்களில் 15 ரயில்கள் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பாதையில் இயக்குவதற்குத் தயாராக உள்ளன.

பல்வேறு கட்டங்களில் நடைபெறும் சோதனைகள்

புதிய மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்ததும், தனித்தனியாக கொண்டு வரப்படும் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. அதன் பின்னர் ரயிலின் வெளிப்புற கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் முதலில் ஆய்வு செய்யப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, குளிரூட்டும் வசதி, பிரேக் அமைப்பு மற்றும் ரயில் கட்டுப்பாட்டு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப அமைப்புகள் பரிசோதிக்கப்படுகின்றன.

இந்தநிலையில் ஸ்டேடிக் மற்றும் டைனமிக் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலும் இந்த சோதனை நடைமுறைகளை கடந்து செல்ல சுமார் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்பட்ட பிறகே அடுத்தகட்ட சோதனைகளுக்கு ரயில் கொண்டு செல்லப்படுகிறது.

வேகத்தை அதிகரித்து சோதனை ஓட்டம்

ஆரம்பகட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ரயில் சோதனைப் பாதையில் இயக்கப்படுகிறது. முதற்கட்டமாக மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு அதன் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. அதன் பின்னர் உயர்மட்டப் பாதையான Viaduct-ல் ரயில் இயக்கப்பட்டு, வேகம் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டங்களும் பல வாரங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, ரயிலின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்படுகிறது.

மற்ற வழித்தடங்களிலும் இயக்க வாய்ப்பு

இந்த புதிய ரயில்கள் முதன்மையாக பாதை 4-க்காக வாங்கப்பட்டிருந்தாலும், பயணிகள் தேவையைப் பொறுத்து சென்னை மெட்ரோவின் மற்ற வழித்தடங்களிலும் பயன்படுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான தடத்தில் மெட்ரோ சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், அங்கு பயணிகள் வருகை மற்றும் ரயில்களின் இயக்க இடைவெளி ஆகியவை மதிப்பிடப்பட்ட பின்னர், இந்தத் தொகுப்பில் இருந்து சில ரயில்கள் அந்த வழித்தடத்திலும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த கட்ட ரயில்கள் எப்போது வரும்?

முதல் தொகுப்பின் 36 ரயில்களும் விரைவில் முழுமையாகக் கிடைக்க உள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுப்புகளுக்கான ரயில் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் 70 ரயில்கள் இரண்டாவது தொகுப்பிலும், 32 ரயில்கள் மூன்றாவது தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. இவை தற்போது உற்பத்தியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்த ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேவை தொடங்குவதற்குத் தேவையான ரயில் வசதிகள் படிப்படியாக அதிகரிக்க உள்ளன. ஒட்டுமொத்தமாக, பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான பாதை 4-க்காக ஆர்டர் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்களில் முதல் தொகுப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புதிய ரயில்களின் வருகை, தொடர் சோதனைகள் மற்றும் வழித்தடப் பணிகள் ஒருங்கிணைந்து நடைபெறுவதால், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் அடுத்தகட்ட சேவைகளுக்கான தயார்நிலை மேலும் வலுப்பெற்று வருகிறது.

Source: Read Full Article