கேரளாவில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், லாட்டரி டிக்கெட் விற்பனையும் பிரபலம். கேரளாவில் காணும் இடமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும். அதிலும் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் எந்த பக்கம் திரும்பினாலும் லாட்டரி கடைகளை பார்த்துவிட முடியும். கேரளாவை பொறுத்தவரை மாநில அரசே லாட்டரிகளை சீட்டுகளை விற்பனை செய்கிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.

தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதன் விலை ரூ.50 ஆகும். அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. இந்த பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், கேரள மக்கள் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதாக லாட்டரி கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என்றபோதிலும் பலரும் வாங்கினர். 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இதன் மூலம் கேரள அரசுக்கு மொத்தம் ரூ.450 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. இந்த ஓணம் பம்பர் லாட்டரியின் மொத்த பரிசுத்தொகை ரூ.125 கோடி.

இந்நிலையில், ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் 4 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.30 கோடி, டிஎல் 360615 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த டிக்கெட் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பில் உள்ள ஒரு கடையில் விற்பனையானது தெரியவந்தது. ஆனால் இதுவரை அந்த டிக்கெட் வைத்திருக்கும் நபர் லாட்டரி ஏஜென்சிகளையோ, எந்த வங்கியையோ அணுகவில்லை.

இந்நிலையில், டிக்கெட் வைத்திருக்கும் நபர் இவர்தான் என்று கூறி பொய்யான பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. மட்டனூரைச் சேர்ந்த லாரி டிரைவர் மனு என்பவர்தான் டிக்கெட் வாங்கிய நபர் என்று பெரும்பாலான சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. மேலும் இவர்தான் அந்த லாட்டரி வைத்திருக்கும் நபர் என்று ஏஐ புகைப்படங்களும் உலா வருகின்றன.

மற்றொரு சமூக வலைதளப் பதிவில் வெற்றி பெற்ற லாட்டரி டிக்கெட் தொகை வட்டோலியில் உள்ள கனரா வங்கிக் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்துமே பொய்யான தகவல்கள் என்று லாட்டரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு வரை வெற்றி பெற்ற லாட்டரி சீட்டுக்குரிய நபர் யாரென்று தெரியாததால் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் லாட்டரித் துறை அதிகாரிகளும், ஏஜெண்டுகளும் இறங்கியுள்ளனர்.

Source: Read Full Article