விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் கிராமங்களுக்கே சென்று மண் மற்றும் பாசனநீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து, பயிர்களுக்கு தேவையான உரப்பரிந்துரைகளை வழங்கும் வகையில் வேளாண்மைத்துறையின் கீழ் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

மண் பரிசோதனையின் மூலம் மண்ணில் உள்ள அமிலம் மற்றும் காரத்தன்மை, உப்புத்தன்மை, சுண்ணாம்புத்தன்மை உள்ளிட்டவற்றுடன் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற பேரூட்டச் சத்துக்கள், சல்பர் உள்ளிட்ட இரண்டாம் நிலை சத்துக்கள் மற்றும் போரான், காப்பர், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்களின் அளவுகள் கண்டறியப்படுகின்றன.

இதன் அடிப்படையில் அடுத்து சாகுபடி செய்ய உள்ள பயிருக்கு தேவையான உரப்பரிந்துரைகள் மற்றும் பிரச்சனைக்குரிய மண்ணை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், பாசன நீரின் தரத்தையும் பரிசோதித்து அதற்கான உரிய பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

‘தமிழ் மண்வளம்’ இணையதளம்

கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மண் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழக அரசால் ‘தமிழ் மண்வளம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உழவர் செயலியின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது வயலின் தோராயமான மண்வள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

துல்லியமான மண் ஆய்வு முடிவுகள் மற்றும் உரப்பரிந்துரைகளை பெற, மண் பரிசோதனை நிலையம் அல்லது நடமாடும் மண்பரிசோதனை நிலையத்தை அணுகி, ஒரு மண் மாதிரிக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி தங்களது வயலுக்கான மண்வள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

மண் மாதிரி சேகரிக்கும் முறை

ஒரு ஏக்கர் நிலத்தில் 8 முதல் 10 இடங்களில், அடுத்து பயிரிடப்பட உள்ள பயிரின் வேர் ஆழத்திற்கு ஏற்ப V வடிவில் குழி அமைத்து, அதன் பக்கவாட்டில் குச்சியால் சுரண்டி மண் மாதிரியை சேகரிக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஒன்றாக கலந்து, கால்பங்கீட்டு முறையில் பிரித்து சுமார் அரை கிலோ அளவிற்கு பரிசோதனைக்காக வழங்க வேண்டும்.

வரப்பு ஓரம், மர நிழல், வாய்க்கால் பகுதி, உரம் இட்ட உடனேயான பகுதி, தண்ணீர் தேங்கிய இடம் மற்றும் எருக்குழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை சேகரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாசன நீர் மாதிரியை சேகரிக்கும் போது, முதலில் அரை மணி நேரம் மோட்டாரை இயக்கிய பின்னர், ஒரு லிட்டர் பாட்டிலை நன்றாக கழுவி, காற்றுக் குமிழ்கள் இல்லாத வகையில் முழுமையாக நீரை நிரப்பி, அன்றே பரிசோதனைக்காக வழங்க வேண்டும். பாசனநீர் பரிசோதனைக்கும் ஒரு மாதிரிக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் மண் பரிசோதனைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2021-22-ம் நிதியாண்டில் 7,800 மண் மாதிரிகளும், 2022-23-ம் ஆண்டில் 8,482 மாதிரிகளும், 2024-25-ம் ஆண்டில் 13,900 மாதிரிகளும், 2025-26-ம் ஆண்டில் 17,600 மாதிரிகளும் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் மேலும் 8,000 மண் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து, மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கீழ்மலையனூர், மேல்அதனூரில் முகாம்

இதன் ஒரு பகுதியாக, நடமாடும் மண்பரிசோதனை நிலையம் சார்பில் 17.09.2026 அன்று ஒலக்கூர் வட்டாரத்திற்குட்பட்ட கீழ்மலையனூர் மற்றும் மேல்அதனூர் கிராமங்களில் மண்வள அட்டை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் விவசாயிகளிடமிருந்து 40 மண் மாதிரிகள் மற்றும் 22 பாசனநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உரப்பயன்பாடு மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை அலுவலர் திருமதி ஜெரிகாட் மெர்சி எடுத்துரைத்தார்.

அடுத்தடுத்த முகாம் நடைபெறும் இடங்கள்

மண்வள அட்டை விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளன:

18.09.2026 – ஒலக்கூர் வட்டாரம், வடம்பூண்டி மற்றும் கொடியம்

23.09.2026 – காணை வட்டாரம், கொரளூர் மற்றும் வெங்காயக்குப்பம்

29.09.2026 – கண்டமங்கலம் வட்டாரம், பரசுரெட்டிபாளையம்

எனவே, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தங்களது மண் மற்றும் பாசனநீர் மாதிரிகளை முகாமில் வழங்கி, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய பரிந்துரைகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆய்வக வேளாண்மை அலுவலர்களான திருமதி ஜெரிகாட் மெர்சி – 78680 90620, திருமதி பிரியங்கா – 99526 27374, செல்வி கிருத்திகா – 70949 09755 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Source: Read Full Article