விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெற்ற மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அவர் குழந்தை பெற்றெடுக்க காரணமான தந்தைக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல், அப்போது 10-ம் வகுப்பு படித்து வந்த தனது மகளை இரவு நேரங்களில் கட்டாயப்படுத்தி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவமனையில் அதிர்ச்சி தகவல்

சிறுமி இளம் வயதிலேயே குழந்தை பெற்றெடுத்ததால், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தையே காரணம் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, பாஸ்கர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

21 ஆண்டுகள் சிறை - ரூ.7 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், நீதிபதி வினோதா இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பாஸ்கருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளி பாஸ்கரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article