விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தியாகிகளின் 25 குடும்பங்களுக்கு பாமக சார்பில் இலவச மனைப் பட்டாக்களை அவர் வழங்கி கௌரவித்தார்.

பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தியாகிகளின் தியாகமும் தற்போதைய சூழலும்:

"அன்று நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தின் போது திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்த தியாகிகளின் உயிர்த்தியாகத்தால்தான் இன்று பல லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தியாகிகள் பற்றிய வரலாற்றை இன்றைய இளைஞர் சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போல இப்போது நடந்திருந்தால் அதன் விளைவே வேறாக இருந்திருக்கும். அந்த கொடூரச் சம்பவத்தின் போது ஆண்ட கட்சியோ, ஆளும் கட்சியோ அதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இந்தியாவிற்கே முன்மாதிரியான சமூக நீதிப் போராளியாக மருத்துவர் ராமதாஸ் திகழ்கிறார்."

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மத்திய அரசு விமர்சனம்:

"தமிழகத்தில் பாமக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி ஆலோசிக்கப்பட்ட போது அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர். மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் முழுமையாகப் பயன்பெறுவார்கள். அதை விடுத்து மத்திய அரசு நடத்தும் பொதுவான மக்கள்தொகை கணக்கெடுப்பு தோல்வியில்தான் முடியும்."

வன்னியர் உள்ஒதுக்கீடு & சட்டமன்ற செயல்பாடுகள்:

"வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1494 நாட்கள் ஆகியும், தமிழக அரசு இதுவரை அதைச் செயல்படுத்தவில்லை. முன்பெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினால் 'கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டும், சிலை வைக்க வேண்டும்' என்று மட்டுமே பேசினார்கள். ஆனால் இன்று சட்டமன்றம் எப்படி நடக்கிறது, சட்டமன்றக் குழுத் தலைவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

முன்பு பிக்பாஸ், ஐ.பி.எல் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்கள், இன்று சட்டமன்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சட்டமன்றத்தின் 'ஸ்டாராக' சௌமியா அன்புமணி திகழ்கிறார். அவர் மூலம் சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன."

தமிழக அரசிற்கு விமர்சனமும் கேள்வியும்:

"விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லை; டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே இந்த மாவட்டம் முன்னணியில் உள்ளது வேதனைக்குரியது. முதலமைச்சர் பழசையே பேசி நேரத்தை வீணடிக்காமல் எதிர்காலத்தைப் பற்றி பேச வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, நீர்மேலாண்மை, விவசாயக் கடன்கள் தள்ளுபடி குறித்துப் விவாதிக்க வேண்டும்.

உரிய நீர்மேலாண்மையைச் செயல்படுத்தாமல், பக்கத்து மாநிலங்களான ஆந்திராவிடமும் கர்நாடகாவிடமும் தண்ணீருக்காகக் கையேந்தும் நிலையே தொடர்கிறது. அரசியல் களம் நமக்குச் சாதகமாக அமைந்து வருகிறது; நிச்சயம் 2031-ல் பாமகதான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போகிறது," என்று அன்புமணி ராமதாஸ் உறுதியாகத் தெரிவித்தார்.

Source: Read Full Article