சென்னை: அகில இந்திய மேலாண்மை சங்கம் (AIMA) வழங்கும் ‘இந்தியாவின் சிறந்த மேலாண்மை சங்கம்’ என்ற உயரிய தேசிய விருதை, 2025-26-ம் ஆண்டிற்காக மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (MMA) மீண்டும் வென்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 16-வது ஆண்டாக இந்த விருதை வென்று தேசிய அளவில் புதிய சாதனையை MMA படைத்துள்ளது.

மேலாண்மைத் துறையில் சிறந்த செயல்பாடுகள், தலைமைத்துவம், தொழில்முறை வளர்ச்சி மற்றும் அறிவுசார் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரே அமைப்பு தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்த விருதை பெறுவது மேலாண்மைத் துறையில் முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

பிளாட்டினம் ஜூபிலி ஆண்டில் இரட்டை பெருமை

மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தனது 70-வது ஆண்டு நிறைவை குறிக்கும் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த தேசிய விருது கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக மேலாண்மை கல்வி, தொழில்முறை திறன் மேம்பாடு, சிந்தனைத் தலைமை மற்றும் வாழ்நாள் கற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பணிகளில் MMA ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மாநாடுகள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், பயிலரங்குகள், போட்டிகள், தலைமைத்துவப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தொழில் துறை, அரசு, கல்வி மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை மேலாண்மை சமூகத்துடன் இணைக்கும் பணியையும் MMA மேற்கொண்டு வருகிறது.

‘16 ஆண்டுகால தலைமைத்துவத்துக்கு சான்று’

MMA தலைவர் ஏ.ஆர். உன்னிகிருஷ்ணன் கூறுகையில், “இந்தியாவில் மேலாண்மை சங்கங்களுக்கான உயரிய தேசிய விருதை தொடர்ந்து 16 ஆண்டுகளாக வென்று வருவது, மேலாண்மைத் துறையில் MMA-வின் தொடர்ச்சியான தலைமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் பங்களிப்புக்கு சிறந்த சான்றாகும்.

தென்னிந்தியாவில் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். நவீன மேலாண்மை சிந்தனைகள், உலகளாவிய பார்வைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை தொழில்முறை பணியாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் MMA தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார்.

டெல்லியில் விருது வழங்கும் விழா

அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் பிளாட்டினம் ஜூபிலி தேசிய மேலாண்மை மாநாட்டின் தொடக்க விழா, செப்டம்பர் 21-ம் தேதி காலை புதுடெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் MMA-வுக்கான ‘இந்தியாவின் சிறந்த மேலாண்மை சங்கம்’ விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னாள் ஜி20 ஷெர்பாவும், நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் விருதை வழங்கினார்.

MMA சார்பில் அதன் முன்னாள் தலைவர் லட்சுமிநாராயணன் துரைசாமி, தற்போதைய தலைவர் ஏ.ஆர். உன்னிகிருஷ்ணன் மற்றும் செயல் இயக்குநர் குரூப் கேப்டன் ஆர். விஜயகுமார் (ஓய்வு), VSM ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

‘அறிவுசார் தளமாக தொடர்ந்து செயல்படுவோம்’

MMA செயலாக்க இயக்குநர் குரூப் கேப்டன் ஆர். விஜயகுமார் கூறுகையில், மேலாண்மைக் கல்வி, தொழில்முறைச் சிறப்பு, சிந்தனைத் தலைமை மற்றும் வாழ்நாள் கற்றல் ஆகியவற்றில் MMA கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த விருது பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

MMA உறுப்பினர்கள், நிர்வாகக் குழுவினர், கல்வி மற்றும் நிறுவனப் பங்காளிகள், ஆதரவாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், கிளைகள் மற்றும் நலம் விரும்பிகளின் தொடர்ச்சியான ஆதரவால் இந்த சாதனை சாத்தியமானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிளாட்டினம் ஜூபிலி மற்றும் தேசிய விருது என இரட்டை பெருமையை பெற்றுள்ள நிலையில், எதிர்காலத்துக்கு தயாரான தலைவர்களை உருவாக்குதல், சிறந்த மேலாண்மைக் கட்டமைப்பை உருவாக்குதல், மேலாண்மைத் துறையில் புதுமை மற்றும் அறிவுசார் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த MMA உறுதியேற்றுள்ளது.

தொழில்முறை வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு தேவையான மேலாண்மைத் திறன்களை வளர்க்கும் முக்கிய அறிவுசார் அமைப்பாக தனது பயணத்தை மேலும் தீவிரப்படுத்த MMA திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Source: Read Full Article