Chennai Cuddalore Railway Line: தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான சென்னை - கடலூர் இடையிலான புதிய ரயில் பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு விரிவாகப் பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் பின்னணியும் பாதை அமைப்பும் - ECR New Rail Project

சென்னை மற்றும் கடலூர் இடையே கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாக 179 கிலோமீட்டர் தொலைவிற்குப் புதிய ரயில் பாதை அமைக்க ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழித்தடமானது வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி வழியாகக் கடலூரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதியில் ரயில் பாதை பாதை அமைப்பில் (Alignment) ஏற்பட்ட சில தொழில்நுட்ப மற்றும் நிலம் சார்ந்த சிக்கல்கள் காரணமாக இத்திட்டத்தின் பணிகள் தாமதமடைந்தன. இருப்பினும், பொதுமக்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

கடலோர மாவட்டங்களின் இணைப்பு வசதி - Chennai to Puducherry train line

தற்போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை விருத்தாசலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் வழியாக முதன்மை ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கிழக்குக் கடற்கரைப் பகுதி ஊடாக மாற்றுப் பாதை அமைப்பது ஒட்டுமொத்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், சுற்றுலா மற்றும் வணிக வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக அமையும். மேலும், நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி இடையிலான புதிய ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அங்குப் பாலம் மற்றும் ரயில் நிலையப் பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், விழுப்புரம் முதல் நாகர்கோவில் வரையிலான 565 கிலோமீட்டர் தூரத்திற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதிச் சுற்றாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிற முக்கிய ரயில்வே திட்டங்கள்

தமிழகத்தின் ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் விழுப்புரம் - தஞ்சாவூர் (193 கி.மீ.) மற்றும் மானாமதுரை - ராமேஸ்வரம் (113 கி.மீ.) ஆகிய இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கான ஆய்வுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - திருவாரூர் - காரைக்கால் இரட்டைப் பாதை மற்றும் கும்மிடிப்பூண்டி - குடூர் 3 மற்றும் 4-வது வழித்தடத் திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்குப் பிறகு இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளன. கடந்த 3 ஆண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 3,517 கிலோமீட்டர் தொலைவிலான 29 ஆய்வுத் திட்டங்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சவால்கள்

அதேவேளையில், மாநிலத்தில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் வேகத்தைக் கூட்ட வேண்டியது அவசியமாகிறது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.734 கோடி மதிப்பிலான ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்குத் தேவையான நிலங்கள் ஒப்படைக்கப்படாததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் நிலவுகிறது. இதேபோலத் திண்டிவனம் - திருவண்ணாமலை வழித்தடத்திற்குத் தேவைப்படும் 276 ஹெக்டேரில் 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திப்பட்டு - புத்தூர், மொரப்பூர் - தர்மபுரி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ஆகிய புதிய திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால், உரிய நிலங்கள் கிடைக்கும்பட்சத்தில் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article