வேலை இல்லாமல் இருந்த தனக்கு முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ. பதவியும், காரும் வழங்கியுள்ளதாக பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரியின் பேச்சால் சட்டசபை சிரிப்பலையில் ஆழ்ந்தது.

தமிழக சட்டசபை இன்று கூடியதும் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் பணி செய்ய அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கார் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஒரு சில உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்தார். அப்போது தேனி மாவட்டம் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ., சபரி பேசினார். அவர் தனது உரையில், “முதல்முறையாக சட்டமன்றம் வந்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தந்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் ஒரு விஷயம் வேடிக்கையாக சொல்கிறேன். நான் கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டது. எனக்கு வேலையும் இல்லை, காரும் இல்லை. இரண்டையும் இன்றைக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்துள்ளார்.

நான் ஊரில் இருந்து ரயிலில் தான் சென்னைக்கு வருகிறேன். ஆட்டோவில் தான் சட்டமன்றம் வருகிறேன். நுழைவு வாயிலில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்கின்றனர். நான் ஐடி கார்டு காட்டி தான் உள்ளே வர முடிகிறது. அதனால் விவசாயிகளுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் வெளியான இன்றைய அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என சபரி தெரிவித்தார். அவரின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

பாட்டு பாடிய பெண் எம்.எல்.ஏ.

தொடர்ந்து தவெக பெண் எம்.எல்.ஏ. சிந்து எம்ஜிஆர் பாடலான “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காக கொடுத்தார்” பாடலின் சில வரிகளைப் பாடி நன்றி சொன்னார்.

அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேசும்போது, முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்கள் மிக சிறப்பானது. மன்னார்குடியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்னிடம் நீங்கள் முதலமைச்சரிடம் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வையுங்கள். உங்கள் பேச்சை அவர் உற்று நோக்குகிறார் என தெரிவித்தார்கள். இந்த கொள்முதல் விலை உயர்வு அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேசமயம் என்னிடம் 4 கார்கள் உள்ளது. இருந்தாலும் முதலமைச்சர் கொடுத்த அரசு காரில் செல்லும்போது கிடைக்கும் பெருமையும், கெத்து என்பது தனி என கூறினார்.

தொடர்ந்து பேசிய மொடக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கார் இன்னோவா மாடலாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தது அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர். இதன்பின்னர் எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, சத்யபாமா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்தனர்.

Source: Read Full Article