சென்னையில் ரயில் திட்டங்கள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மின்சார ரயில், பறக்கும் ரயில் திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. அதிலும் 5 ரூபாய் 10 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் எளிய மக்களுக்கு உதவியாக உள்ளது. அந்த வகையில் சென்னை கடற்கரை முதல் - வேளச்சேரி வரை சுமார் 19 கி.மீட்டர் பறக்கும் ரயில் திட்டமானது செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தினந்தோறும் பல ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்பட்டது.

பறக்கும் ரயில் டூ மெட்ரோ ரயில்

இந்த வழித்தடத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், சென்னை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசால் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) கையெழுத்தாகியுள்ளது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த மே மாதம் தெற்கு ரயில்வேக்கும் தமிழக அரசுக்கும் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, சொத்துகளை ஒப்படைத்தல் மற்றும் MRTS புறநகர் ரயில் சேவைகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் இயக்கம்

இதன் படி, தெற்கு ரயில்வே தனது சொத்துகள் மற்றும் பொதுவான பராமரிப்புகளை 90 நாட்களுக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் முதன்மை ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு தவிர்த்து மற்றவை மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் முழுமையான ரயில் செயல்பாடுகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் வழங்கப்படும் எனவும், இந்த காலக்கட்டத்தில், தமிழக அரசு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை முழுமையாகவோ அல்லது தவணைகளிலோ செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் மேம்பாடு

இந்த வழித்தடத்தில் மொத்தமுள்ள 21 ரயில் நிலையங்களில் 19 நிலையங்களின் நிலம், உள்கட்டமைப்பு, மின்தூக்கிகள் நகரும் படிகட்டுகள் நடைமேம்பாலங்கள், தண்டவாளங்கள், சிக்னல் அமைப்புகள் மற்றும் மின்சார ரயில்கள் அனைத்தும் மெட்ரோ நிர்வாகத்திடம் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பறக்கும் ரயில் திட்ட பாலத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ரயில்களும் மொத்தமாக மாற்றப்படவுள்ளது.

புதிய திட்டங்கள் என்ன.?

சென்னை கடற்கரை மற்றும் சென்னை கோட்டை நிலையங்களில் இணைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.

கடற்கரை ரயில் நிலையத்தில் 9 மற்றும் 10 ஆகிய இரு நடைமேடைகள் MRTS சேவைக்காக ஒதுக்கப்படும்.

கோட்டை ரயில் நிலையத்தில் 'கிராசிங் ஸ்டேஷன்' அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Source: Read Full Article