Tiruvannamalai Bypass Project: சுமார் 22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கான திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டத்திற்கு, 623 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம்:

மிக நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டத்திற்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. சுமார் 22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் இந்த பணிக்காக 623 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய புறவழிச்சாலை திட்டமான கோயில் நகரமான திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என கூறப்படுகிறது. மேலும், வேலூர் தொடங்கி தூத்துக்குடியில் உள்ள வ.வு, சிதம்பரனார் துறைமுகம் வரை 604 கிலோ மீட்டருக்கு நீண்டு, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 உடனான, திருவண்ணாமலை மாவட்டத்தின் இணைப்பை மேம்படுத்தவும் புதிய புறவழிச்சாலை திட்டம் உதவும்.

22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலை:

திட்டமிடப்பட்ட புறவழிச்சாலையானது, புதிய தேசிய நெடுஞ்சாலையான 38-ஐ ஒட்டியுள்ள வேலக்கண்டல் அருகே தொடங்கி திருவண்ணாமலை நகரை ஒட்டி எண்டால் அருகே முடிவடைய உள்ளது. மொத்தம் மதிப்பிடப்பட்டுள்ள 22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கான திட்டத்தில் சுமார் 13.1 கிலோ மீட்டர் தூரம் ஒரு புதிய பசுமை வழிப்பாதையில் உருவாக்கப்பட உள்ளது. மீதமுள்ள 9.6 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலையானது, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை 77 வழித்தடத்தை பயன்படுத்தி, மேம்படுத்தி மீண்டும் புதிய பாதையுடன் இணைக்கப்படும்.இதனால், புதியதாக நிலத்தை கையப்படுத்த வேண்டிய தேவை மிகப்பெரிய அளவில் குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை 2 ஆண்டுகளில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை புறவழிச்சாலை - கட்டுமான டிசைன்

அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட வழித்தடமாக வடிவமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை புறவழிச்சாலையானது, குறிப்பிட்ட சந்திப்புகள், இணைப்புச் சாலைகள் மற்றும் சேவைச் சாலைகள் வழியாக மட்டுமே உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் அனுமதிக்க உள்ளது. இது நீண்ட தூரப் போக்குவரத்தை உள்ளூர் போக்குவரத்திலிருந்து பிரித்து, அதன் தடையற்ற இயக்கத்தை சாத்தியமாக்குகிறது. அருகிலுள்ள பகுதிகளுக்கு அணுகலை வழங்குவதற்காக, இந்தத் திட்டத்தில் 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான சேவைச் சாலைகளும், 6 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்த வழித்தடமானது, தேசிய நெடுஞ்சாலை-77 (NH-77), மாநில நெடுஞ்சாலைகள் 236, 6, 9A மற்றும் 9 ஆகியவற்றுடன், ஒரு முக்கிய மாவட்டச் சாலை மற்றும் பல கிராமச் சாலைகளையும் கடந்து செல்லும். தடையற்ற போக்குவரத்தை எளிதாக உறுதி செய்யும் வகையில், மூன்று மேம்பாலங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றுள் ஒன்று வேலக்கண்டல் தொடக்கப் புள்ளியிலும், இரண்டாவது தேசிய நெடுஞ்சாலை-38 உடனான எண்டால் முனையச் சந்திப்பிலும், மற்றொன்று தேசிய நெடுஞ்சாலை-77 சந்திப்பிலும் அமையவுள்ளது.

இதையும் படியுங்கள்: Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

நேரடிப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காமல், அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட வழித்தடம் முழுவதும் இணைப்பைப் பேணுவதற்காக, முக்கிய இடங்களில் ஐந்து வாகனக் கீழ்ப்பாலங்களும் ஐந்து இலகுரக வாகனக் கீழ்ப்பாலங்களும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் பெரிய பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் அல்லது ரயில்வே கேட்களை கடக்கும் சூழல் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும், தற்போதுள்ள NH-77 வழித்தடத்தில் நான்கு சிறிய பாலங்களின் புனரமைப்பு அல்லது அகலப்படுத்துதல் மற்றும் 19 சிறுபாலங்களை அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியுமாம்.

திருவண்ணாமலை புறவழிச்சாலை - பலன், அதிகபட்ச வேகம்

திருவண்ணாமலை புறவழிச்சாலை அமைத்து முடிக்கப்பட்டதும், அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையான 38 வழித்தடத்தைப் பயன்படுத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து காரணமாக, அதிக போக்குவரத்தை காணும் திருவண்ணாமலையிலிருந்து வாகன நெரிசல் கடுமையாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனரக வாகனங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கான பேருந்துகள் நகருக்குள் வருவது குறையும்.

நகரின் மையப் பகுதிக்குள் வாகனங்களின் ஒட்டுமொத்த போக்குவரத்து சுமார் 13.5 கி.மீ அளவிற்கு குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியை கடக்க முயலும் பயணிகளுக்கு சுமார் 30 நிமிடங்கள் மிச்சமாகும்.

போளூர், செய்யாறு, ஆரணி மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து சேலம் அல்லது செங்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 13 கி.மீ. நீளமுள்ள சாலைகளை தவிர்த்து பயணிக்க முடியும்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள வேலனந்தல் கிராமத்திற்கு அருகில் இது நேரடியாக இணைகிறது

தண்டராம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தற்போது மேற்கொள்ள வேண்டிய சிரமமான 25 கிலோ மீட்டர் தூரத்திற்கான நீளமான பயணம், வெறும் 10 கிலோ மீட்டர் நேரடிப் பயணமாக மாற உள்ளது

NH-38, NH-77 மற்றும் பல முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை (SH-236, SH-6, SH-9A, SH-9) புதிய புறவழிச்சாலை இணைக்கிறது

பெங்களூரு, வேலூர், புதுச்சேரி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் சரக்கு வாகனங்களுக்குத் தடையற்ற மாற்றுப் பாதையை உருவாக்குகிறது.

இதனிடையே, திருவண்ணாமலை புறவழிச்சாலை பணிகள் முடிந்த பிறகு 10 ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் பொறுப்பும் ஒப்பந்ததாரரையே சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article