தேர்தல் முடிவு- திமுக டூ தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 4 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில் தனிப்பெரும் கட்சியாக மதிமுக உருவெடுத்தது. அப்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. அதே நேரம் மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைய திட்டமிட்டது.

இதற்காக திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைகோ வற்புறுத்திய நிலையில், அந்த எம்ஏல்ஏக்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நிலைப்பாடு மாறியது எப்போது.? தங்களின் அடுத்தக்கட்ட திட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டி

இது தொடர்பாக மதிமுக எம்எல்ஏக்களான தி.மு.இராசேந்திரன் மற்றும் இரா.செந்தில்செல்வன் கூறுகையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக வேட்பாளர்களாக தலைவர் வைகோ அவர்களால் நாங்கள் நிறுத்தப்பட்டோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எனது தம்பிகளை வெற்றி பெற வைத்தால் ஐந்தாண்டு காலத்துக்கு சிறப்பான சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்கள் செயல்படுவார்கள் என்று தேர்தல் பரப்புரையின் போது தலைவர் வைகோ அவர்கள் சொன்னார்கள். தேர்தல் வெற்றிக்குப் பிறகு 23.5.2026 கடையநல்லூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்திலும் அதைக் குறிப்பிட்டார்கள்.

ராஜினாமா செய்ய நிர்பந்தம்- அமைச்சரோடு சந்திப்பு

மே 4 முதல் ஜூன் 15 வரை சட்டமன்றத்தில் தி.மு.க. கொறடா உத்தரவுப்படி நடந்து கொள்ளுங்கள் என்றும், நடந்து கொள்வார்கள் என்றும் ஊடகங்களில் சொன்ன பொதுச்செயலாளர் வைகோவின் நிலைப்பாடு ஜூன் 16 அன்று தமிழ்நாடு அமைச்சர் ஒருவரின் சந்திப்புக்குப் பிறகு மாறத் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து எங்களை பொதுச்செயலாளர் வைகோ ராஜினாமா செய்யச் சொன்னார்.எங்களை ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார். இதைத் தெரிந்து கொண்ட தொகுதி மக்களும், பொதுநல அமைப்பினரும், 'நீங்கள் ராஜினாமா செய்யக் கூடாது, சட்டமன்ற உறுப்பினராகவே தொடர வேண்டும்' என்று அறிவுறுத்தினார்கள். 'வாக்களித்த எங்களுக்கு மரியாதை தரும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தக் கருத்துகளை பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் நேரில் சொன்னோம்.

அவதூறு சேற்றை வீசினார் வைகோ

அவர் அதனை ஏற்கவில்லை. இருப்பினும் ஆறு மாத காலத்துக்கு அமைதியாக இருப்பது என்று முடிவெடுத்து அமைதியாகவே இருந்து வந்தோம். இந்த சூழலில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, 'அவர்கள் இருவரும் ஒரு மாதத்துக்கு முன்பே விலை போய்விட்டார்கள்' என்று பேட்டி அளித்து தொண்டர்கள் மத்தியில் எங்கள் மீது அவதூறு சேற்றை வீசத் தொடங்கியது எங்களை வேதனைக்கு உள்ளாக்கியது. சுமார் நாற்பது ஆண்டு காலமாக வைகோ பின்னால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணித்த எங்களுக்கு இறுதியாக கிடைத்தது இது போன்ற இழிவான பழிச்சொல்லே. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிப்பதாக தெரிவித்தனர்.

திமுகவில் நீடிக்கிறோம்

ஆளும் கட்சி கூட்டணியில் சேர்வோம், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும், அமைச்சராகக் கூட ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தனர். மேலும் சின்னஞ்சிறு வயது முதல் நாங்கள் நேசித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்றிட உறுதியேற்று - முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதாக தெரிவித்தனர்.

Source: Read Full Article