மேற்கு ஆசியாவில், அமெரிக்காவுடன் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாட்டின் தலைநகரான புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஈரானிய அதிபர் மசூத் பெஷெஷ்கியன், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, செப்டம்பர் மாதம் புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என்று ஈரானிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் மோதல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், பெஷெஷ்கியனின் புது தில்லி பயணம் அமைந்துள்ளது.

இந்தியா நடத்தும் பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது

2026 ஆம் ஆண்டில், இந்தியா 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தவிருப்பதாலும், இந்தியா தலைமையில் நடைபெறவுள்ள அந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என வைக்கப்பட்டிருப்பதாலும், பெஷெஷ்கியனின் இந்த புது டெல்லி பயணம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது .

முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அந்த காலகட்டத்தில், இரு நாடுகளின் தலைவர்களும் ஒரு இருதரப்பு சந்திப்பையும் நடத்தினர். அதில், அவர்கள் இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து விரிவான மற்றும் ஆழமான விவாதங்களை மேற்கொண்டனர். 2024-ல், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகியவற்றுடன் ஈரானும் பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினரானது.

அமெரிக்காவுடனான போரில் உதவ இந்தியாவிடம் கேட்பாரா பெஷெஷ்கியன்.?

மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுடன் நடந்துவரும் மோதலிலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களைத் தணிக்கும் நோக்கிலும், ஈரான் இந்தியாவை ஒரு சாத்தியமான கூட்டாளியாகக் கருதுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்திருந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, இதுகுறித்து சூசகமாகத் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் நெருக்கடியை தணிப்பதில், புது டெல்லி ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

ஊடகங்களுடனான ஒரு உரையாடலில், 'இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் ஒரு தீர்வாக டெஹ்ரான் கருதவில்லை. பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே இந்த மோதலை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறது. மேலும், இந்தியாவின் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் நாங்கள் வரவேற்போம்' என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு சூழலில், இந்தியா வர உள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், அமெரிக்கா உடனான போரை நிறுத்த இந்தியாவிடம், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின் போது, அவர் உதவி கோருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே, நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஈரான்-அமெரிக்கா இடையேயான மத்தியஸ்தத்தில் தன்னை ஒரு அங்கமாக காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அந்த பட்டியலில் பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிடவில்லை. அதனால், இந்தியா அந்த இடத்தை நிரப்புமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: Read Full Article