நாளை தொடங்க உள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க் கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கடுமையாகச் சாடி உள்ளார்.

காவிரி போராட்டத்தின்போது முதல்வர் விஜய்- நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசியதாக, எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து, திமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கனிமொழி எதிர்வினை

இந்த நிலையில் உதயநிதி கைதுக்கு கனிமொழி என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’’எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.

ஆனால், எதிர்க் கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.

அப்பட்டமான கோழைத்தனம்

நாளை தொடங்க உள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க் கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்’’ என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கூறும்போது, ’’திரிஷா மட்டும்தான் பெண்ணா? உண்மையில், கூட்டம்தான் திரிஷாவின் பெயரை முழங்கியது. உதயநிதி அவருடைய பெயரைக் கூட குறிப்பிடவில்லை.

மக்கள் பிரச்சினைகள் குறித்து அக்கறை இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் உதயும் முதல்வர் விஜயும் திரிஷாவின் விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்; தமிழகத்தின் மற்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை.

கர்நாடக பாஜக கர்நாடக காங்கிரஸும் கூட தமிழகத்திற்குக் காவிரி நீர் தருவதை எதிர்க்கிறது, ஆனால் முதல்வர் விஜயோ மௌனம் காக்கிறார். இப்போது இவற்றைத் தொடர்புபடுத்திப் பாருங்கள்; தமிழகத்தின் உரிமைகள் குறித்து டிவிகேக்கு அக்கறை இல்லை’’ என்று கடுமையாகச் சாடி உள்ளார்.

Source: Read Full Article