அதிமுகவில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.,க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக டூ தவெகவுக்கு பயணம்

தவெக அரசில் அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஒருகாலக்கட்டத்தில் அதிமுகவில் மிக முக்கிய நபராக திகழ்ந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு அரசியலில் செயல்பட்டு வந்த அவர், அக்கட்சியின் மூத்த அரசியல்வாதியாக வலம் வந்தார். ஆனால் கால சூழ்நிலை செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை திமுக தங்கள் பக்கம் இழுக்க எவ்வளவோ முயன்றது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக புதிதாக தொடங்கப்பட்ட, ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவில் இணைந்தார்.

தன்னுடைய அரசியல் அனுபவம், இளைஞர்கள் படை என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தார். தவெக அரசில் செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் முடிவு ஆரம்பத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் இப்போது அவரின் பாதையைப் பின்பற்றி அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

பதவியை ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.,க்கள்

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 6 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர். இது அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அமைச்சர் செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் இருப்பதாக சொல்லப்பட்டது.

இன்னும் 25 எம்.எல்.ஏ.க்கள் வர தயார்

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசிய கருத்துகள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது, உங்க (அதிமுக) நிலைமையைப் பார்க்கும்போது 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டனர். அதனால் 47 எம்.எல்.ஏ.,க்கள் என இருந்த பலம் இன்று 41 ஆக குறைந்து விட்டது. இன்னும் 10 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைய தயாராகி விட்டார்கள். மொத்தத்தில் 25 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தவெகவுக்கு வர ரெடியாக இருக்கிறார்கள். இதெல்லாம் நடந்து வருகிறது” என தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் செயல்பாடுகளால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதல்வர் விஜயின் பணிகளைக் கண்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர் எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்க்கு மேலும் நெருக்கடி

ஏற்கனவே சரிந்து கிடக்கும் அதிமுகவை நிலைநிறுத்த எடப்பாடி பழனிசாமி போராடி வரும் நிலையில் செங்கோட்டையனின் பேச்சு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Source: Read Full Article