காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை கேட்டு சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில், திண்டுக்கல் குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியர் அய்யாச்சாமி உரிய விளக்கம் அளிக்குமாறு கேட்டு, சென்னை வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர்மேலாண்மை ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அய்யாச்சாமிக்கு 15 நாட்கள் கெடு

சென்னை வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் அனுப்பியுள்ள ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸில், வட்டாட்சியர் அய்யாச்சாமி மீது இரண்டு முக்கிய குறைபாடுகள் கூறப்பட்டுள்ளன. அதாவது, அவர் அனுப்பிய சுற்றறிக்கையானது அனைத்து சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, பல்வேறு கண்டனங்களும், தேவையற்ற சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது என்றும், அவரது நடவடிக்கைகளினால் பல்வேறு அமைப்புகளிடமிருந்து ஆட்சேபணைகள் மற்றும் போராட்ட அறிவிப்புகள் வெளிவருவது மட்டுமல்லாமல், அதனால் குஜிலியம்பாறை வட்டத்தில் அமைதியான நிர்வாகச் சூழ்நிலை பாதிக்கப்பட காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வட்டாட்சியர் பணியில் சேர்ந்து 10 தினங்களிலேயே, களநிலைமை, உள்ளூர் சூழல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடைமுறைகள் ஆகியவற்றை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையான முறையில் சில நிர்வாக முடிவுகளை மேற்கொண்டும், அலுவலக பணியாளர்களுடனான சுமூகமான போக்கு இல்லாமலும், அவரது செயல்களின் மூலம் நிர்வாகத்தின் சீரான செயல்பாடு, அலுவலகத்தில் அமைதியான பணிச்சூழல் ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதோடு, மேற்கண்ட செயல்மூலம் அரசுப் பணியில் நேர்மையும், கடமையுணர்வு மற்றும் பற்றுணர்வின்றி செயல்பட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகள் 1973-ன்படி பிரிவு 20(1) மற்றும் 20(2) க்கு முரணாக அவர் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும்
மேல்முறையீடு) விதிகளில் விதி 17(a)-இன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தேச நடவடிக்கைக்கு எதிராக விளக்கம் ஏதும் தெரிவிக்க விரும்பும் பட்சத்தில், அதனை குறிப்பாணை கிடைக்கப் பெற்ற 15 (பதினைந்து) நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அவருக்கு உரிய முறையில்
சந்தர்ப்பம் அளிக்கப்படுவதாகவும், மேற்குறிப்பிட்டகாலக் கெடுவிற்குள் அவரது விளக்கத்தை அளிக்க
வேண்டும் என்றும், அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறும் பட்சத்தில், அவர் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை எனக் கருதி, இருக்கின்ற ஆவணங்களின் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் முடிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பும் வகையில் சுற்றறிக்கை அனுப்பிய அய்யாச்சாமி

சென்னை நகரப் பட்டியலிலிருந்து, வட்டாட்சியர் பயிற்சிக்காக திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்ட அய்யாச்சாமி, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி குஜிலியம்பாறை வட்டாட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று, குஜிலியம்பாறை வட்டார கிராமங்களில் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) கட்சியினரின் விபரங்களை சேகரித்து, வருவாய் ஆய்வாளர்கள் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு அதிரடி சுற்றறிக்கையை வெளியிட்டார். மேலும், அதற்கு கிராம உதவியாளர்கள் உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அவரது இந்த சர்ச்சை உத்தரவு, சமூக ஊடகங்களில் தீயாய் பரவி, பிரிட்டிஷ் காலத்து கைரேகைச் சட்டப் பாணியில் ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கங்களை எப்படி கணக்கெடுக்கலாம் என கேள்வி எழுப்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் எம்பி சச்சிதானந்தம் தரப்பில் இருந்து மிகக் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனால், குஜிலியம்பாறை வட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றதுடன், வட்டாட்சியர் அய்யாசாமி, குஜிலியம்பாறை வட்டாட்சியர் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, சென்னை வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தற்போது அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியர் அய்யாச்சாமி, ஆட்சியருக்கும் தெரியாமலேயே, தன்னிச்சையாக அப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாகவும், துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Source: Read Full Article