தமிழ்நாட்டில் முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்வி திமுக மிக கடுமையாக பாதித்துள்ளது. கட்சியை மறு சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும், கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டியதன் அவசியத்தையும் திமுக-விற்கு இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது.

பதவியை இழக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள்:

ஏனென்றால், திமுக-வின் தோல்விக்கு கட்சியின் மூத்தவர்களுக்கும், இளையவர்களுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போரும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில், இன்று நடந்த திமுக செயற்குழு கூட்டத்தால் மாவட்டச் செயலாளர்களின் வயது வரம்பை 70 ஆக நிர்ணயித்துள்ளனர்.

இதனால், திமுக-வின் முக்கிய தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான எ.வ.வேலு, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், செஞ்சி மஸ்தான், கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், முத்துசாமி ஆகியோர் விரைவில் தங்கள் மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கின்றனர்.

பறிபோகப்போகும் அதிகாரம்:

திமுக-வைப் பொறுத்தமட்டில் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் என்பது மிகப்பெரியது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் கீழ் 4 அல்லது 5 சட்டமன்ற தொகுதிகள் இதுநாள் வரை இருந்து வருகிறது. இதனால், குறைந்தது 4 எம்எல்ஏ வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரமும், 4 எம்எல்ஏ-க்களும் மாவட்டச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சூழலில், அதிகாரமிக்க மாவட்டச் செயலாளர்கள் பதவியை இழக்கும் அபாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவியை இழக்க நேரிட்டால் அவர்கள் கட்சியில் அதிகாரத்தை இழக்க நேரிடும். அவ்வாறு அதிகாரத்தை இழக்க நேர்ந்தால் அவர்களுக்கு கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட கிடைத்த வாய்ப்பு அடுத்த தேர்தலில் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

அரசியல் சாம்ராஜ்யத்திற்கு முடிவா?

இதனால், முன்னாள் அமைச்சர்களான அவர்கள் பீதியடைந்துள்ளனர். மாவட்டச் செயலாளர் பதவியையும் இழந்து அடுத்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டால் அவர்களின் அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது என்பதையே மறைமுகமாக கருத வேண்டியுள்ளது.

இவர்களின் மாவட்டச் செயலாளர்கள் பதவி முடிவுக்கு வர உள்ள சூழலில், மாவட்டச் செயலாளர்கள் பதவிக்காக நீண்ட நாள் காத்திருந்த திமுக-வினருக்கு இது ஜாக்பாட்டாகவும் மாறியுள்ளது. இந்த ஜாக்பாட்டை பயன்படுத்தி மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதற்காக ஒவ்வொருவரும் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் மூலமாக ஏற்கனவே இவர்கள் தங்கள் பதவியைத் தக்க வைக்கத் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். ஆனால், உதயநிதி போன்ற இளம் தலைவர்கள் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த கடினமான முடிவை எடுத்தே தீர வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே, இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article