தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் மிகப்பெரிய நீர் ஆதாரமாக திகழ்வது காவிரி ஆறு. காவரி ஆற்றை நம்பியே மொத்த டெல்டா பகுதியின் பாசனமும் உள்ள நிலையில், கர்நாடக அரசு நடப்பாண்டிற்கான காவிரி நீரை தற்போது வரை திறக்காமல் உள்ளது.

கர்நாடக கட்டியுள்ள அணைகள்:

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்குமான காவிரி விவகாரம் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது. கடந்த அரை நூற்றாண்டில் அதன் வீரியம் அதிகரித்துள்ளது. தற்போது காவிரி நதியில் மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு மேலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே என்னென்ன அணைகள் இருக்கிறது? என்பதை கீழே காணலாம்.

1. கேஆர்எஸ் அணை:

கிருஷ்ண ராஜசாகர் அணையே கேஆர்எஸ் அணை என்று அழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே முதன்முதலில் கர்நாடகத்தில் கட்டப்பட்ட அணை இந்த கிருஷ்ணராஜ சாகர் அணை. மைசூர் சமஸ்தானத்தால் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு 1911ம் ஆண்டு மைசூர் அருகே உள்ள கண்ணம்பாடி கிராமத்தில் இதற்கான அடிக்கல் நடப்பட்டது. மகாராஜா கிருஷ்ணராஜா வாதியார் 4வது மேற்பார்வையில் பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா இதை கட்டி முடித்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த இந்த அணை 130 அடி உயரமும், 8 ஆயிரத்து 630 அடி நீளமும் கொண்டது. இன்றும் கர்நாடகவின் அணைகளில் மிக மிக முக்கியமான அணையாக இந்த அணை உள்ளது. இது 1932ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது 49.45 டிஎம்சி கொள்ளளவு நீர் தாங்கும் திறன் கொண்டது.

2. கபினி அணை:

காவிரி ஆற்றின் முக்கியமான கிளை ஆறான கபிலா அல்லது கபானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை இந்த கபினி அணை ஆகும். 1974ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. இதற்கான பணிகள் 1959ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மைசூரின் அருகே உள்ள எச்.டி.கோடே கிராமத்தின் அருகே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 3 ஆயிரத்து 169 அடி நீளம் கொண்டது. 166 அடி உயரம் கொண்டது. பொதுவாக இந்த அணை ஜுன் முதல் நவம்பரில் நிரம்பும். இந்த அணை 19.52 டிஎம்சி கொள்ளளவு நீர் தாங்கும் ஆற்றல் கொண்டது.

3. ஹேமாவதி அணை:

காவிரி ஆற்றின் மிக மிக முக்கியமான கிளை ஆறு கர்நாடகாவில் ஹேமாவதி ஆறு. இந்த ஹேமாவதி ஆறின் குறுக்கே கர்நாடக அரசு ஹாசன் மாவட்டத்தில் உள்ள கோரூர் கிராமத்தில் 1979ம் ஆண்டு அணையை கட்டியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டதற்கான பணிகள் 1970ம் ஆண்டே கர்நாடக அரசால் தொடங்கப்பட்டது. இந்த ஹேமாவதி அணை 44.5 மீட்டர் உயரமும், 4 ஆயிரத்து 692 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த அணை மூலமாக கர்நாடக அரசு 35.7 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்க இயலும். இந்த அணையில் இருந்து மாண்ட்யா, ஹாசன், தும்கூர் போன்ற கர்நாடக மாவட்டங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

4. ஹாரங்கி அணை:

ஹாரங்கி அணை கர்நாடகவின் குடகு மாவட்டத்தில் உள்ள குஷல்நகர் தாலுக்காவில் கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கிளை ஆறான ஹாரங்கியின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளதால் இதற்கு ஹாரங்கி அணை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணை கட்டும் பணி 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அணை அதிகாரப்பூர்வமாக 1982ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணை 164 அடி உயரமும், 2 ஆயிரத்து 775 அடி நீளமும் கொண்டது. இந்த அணை 8.50 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

இந்த 4 அணைகளும் கர்நாடகவின் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருப்பதால் இந்த அணைகளை கடந்தே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வர வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடுவது வழக்கமாக உள்ளது. தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே மேகதாது அணை கட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடக அரசைப் பொறுத்தமட்டில் அவர்கள் மாநில எல்லையில் அந்த அணை கட்டப்படுவதாக கூறப்பட்டாலும், நீர்வழித்தடத்தைப் பொறுத்தமட்டில் அது தமிழ்நாட்டிற்குச் செல்லும் நீர்வழித்தடத்தை மறைத்தே கட்டப்படுவதாக கருதப்படுகிறது. இதனால், பல லட்சம் தமிழ்நாடு விவசாயிகள் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Source: Read Full Article