CM Vijay DVAC: ஆனந்த் குமார் சோமானி 1999ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

லஞ்ச ஒழிப்புதுறையின் புதிய இயக்குனர் யார்?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையாளர் அருண் நியமிக்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 2 மாதங்களுக்கு முன்பாகவே அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்த துறையை கையாளும் கூடுதல் பொறுப்பு ஐபிஎஸ் அதிகாரி சி. மகேஸ்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையை மறுசீரமைக்கவும் உடனடியாக முழுநேர இயக்குநரை நியமிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு 4 வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக நியமிக்க, ஆனந்த் குமார் சோமானியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM விஜய் பரிசீலனை..!

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதே தங்களின் முக்கிய இலக்கு என முதலமைச்சர் விஜய் சூளுரைத்து வரும் நிலையில், தனது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் நேர்மையான அதிகாரியை இந்த பதவிக்கு கொண்டு வர விரும்புகிறராம். இதனால் தான் மத்திய அரசு பணியில் இருந்து அண்மையில் தனது சொந்த கேடரான தமிழ்நாட்டிற்கு திரும்பிய, சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் வித்யா ஜெயந்த் மற்றும் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான ஆனந்த் குமார் சோமானி ஆகியோரின் பெயர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்று இருந்தன. அதில் வித்யா ஜெயந்த் குல்கர்னி பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக அண்மையில் தன நியமனம் செய்யப்பட்டார். இதனால், DVAC-யின் இயக்குனராக ஆனந்த் குமார் நியமிக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

யார் இந்த ஆனந்த் குமார் சோமானி?

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் குமார் சோமானி 1999-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். மத்திய மண்டலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் அதிகாரியாக சிறப்பாக சேவையாற்றியுள்ளார். மதுரை சரக டிஐஜியாகச் செயல்பட்டபோது சட்ட ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றப் புலனாய்வில் மிகச் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தியதற்காக, 2015-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கத்தைப் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் இணைச் செயலாளர் பதவிக்கான தகுதியையும் பெற்றார். சட்டம்-ஒழுங்கு மற்றும் நுட்பமான விசாரணைகளில் இவருக்கு உள்ள நீண்ட அனுபவம் காரணமாக, லஞ்ச ஒழிப்புத் துறையின் முழுநேர இயக்குநராக இவரை நியமிக்க தவெக அரசு முடிவு செய்துள்ளதாம். ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள இவரது நியமனம் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறைக்கான புதிய இயக்குனர் பொறுப்பேற்றதும் திமுகவின் பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீதான நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை

Source: Read Full Article