CM Vijay PM Candidate: அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆய்வில் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் பட்டியலில் CM விஜய்..!

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்ற அரசியல் உரையாடல் நீண்ட காலமாகவே நிலவி வந்தாலும், தற்போது வரை அது கனவாகவே உள்ளது. இந்நிலையில், அண்மையில் நடந்த ஆய்வின் முடிவுகளில், முதலமைச்சராகி வெறும் 100 நாட்களையே கடந்த விஜயின் பெயரின் ஆச்சரியமளிக்கும் வகையில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக பல தசாப்தங்களாக அரசியலில் பயணித்தோரின் பட்டியலில் சுமார் மூன்று வருடங்களே ஆன தமிழக வெற்றிக் கழக தலைவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியா டுடே-சிவோட்டர் மூட் ஆஃப் தி நேஷன் (MOTN) கருத்துக் கணிப்பில், இந்தியாவின் அடுத்த பிரதமராக மிகவும் விரும்பப்படும் தேர்வாக விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். தேசிய அரசியல் குறித்து பெரிய அளவில் விஜய் பேசாவிட்டாலும், சமூக வலைதளங்களின் தாக்கம் காரணமாக இந்த நிலையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கள ஆய்வின் விவரங்கள்

இந்த சர்வே-யானது ஜுலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை 25,184 பேரிடம் நேரடியாகக் கணக்கெடுக்கப்பட்டு, சிவோட்டர் (CVoter) நிறுவனத்தால் நடத்தப்பட்டது. சிவோட்டரின் வழக்கமான கண்காணிப்பின் ஒரு பகுதியாக, கடந்த ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட மேலும் 91,795 நேர்காணல்களின் தொகுப்பும், ஆகஸ்ட் 'தேசத்தின் மனநிலை 2026'-இன் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன. அதன்படி விஜய்யின் அதிரடியான வெற்றியால் மட்டுமல்லாமல், அவர் தேசிய அரசியலில் நுழைந்த வேகம் காரணமாகவும் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கவனத்தை ஈர்க்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனரான அவர், அடுத்த பிரதமருக்கான பொதுமக்களின் விருப்பப் பட்டியலில் 9.2 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார். அதேநேரம், 48.7 சதவிகித வாக்குகளுடன் பிரதமர் மோடி முதலிடத்திலும், 27.1 சதவிகித வாக்குகளுடன் ராகுல் காந்தி இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர். அதேநேரம், மம்தா பானர்ஜி (2%), அகிலேஷ் யாதவ் (1.7%), சிஜேபி நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான அபிஜித் திப்கே (1.3%), அரவிந்த் கெஜ்ரிவால் (1.2%) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விஜய் மூன்றவாது இடத்தை எட்டியுள்ளார்.

கலக்கத்தில் காங்கிரஸ்

ஆட்சி அதிகாரத்திற்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில், தனது அரசியல் அடையாளத்தை தமிழ்நாட்டை தாண்டி தேசிய அளவில் விஜய் விரிவுபடுத்தியுள்ளார் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. ஆரம்பத்தில் தவெக உடனான கூட்டணி மூலம், காங்கிரஸ் கட்சி தென்மாநிலங்களில் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் தனது பலத்தை தனக்கான வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வதில் விஜய் தீவிரமாக உள்ளாராம். தமிழ்நாட்டை தாண்டி அவருக்கு கேரளாவிலும் தீவிரமான ரசிகர் பட்டாளம் உண்டு. இதேபோல் கேரளா, தெலங்கானா, ஆந்திரா , கர்நாடகாவிலும் அவருக்கென கணிசமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதனை 2029ம் ஆண்டு தேர்தலில் தனக்கான வாக்கு வங்கியாக மாற்றுவதிலும் தவெக முனைப்பு காட்டி வருகிறதாம். இதன் மூலம், தமிழ்நாட்டை தாண்டி தென்மாநிலங்கள் முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முதலமைச்சர் விஜய் விரும்புகிறாராம்.

இதையும் படியுங்கள்: Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்

விஜய்க்கு பிரதமராக வாய்ப்பு?

கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல்களின் போது கிடைத்ததை போன்ற பெருவாரியான வெற்றி, 2024ம் ஆண்டில் பாஜகவிற்கு கிடைக்கவில்லை. இதனால் வரும் 2029ம் ஆண்டு தேர்தல் அவர்களுக்கு சவாலானதாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஒரு வேளை யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், பல கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியும் அமைக்கப்படலாம் என கருதப்படுகிறது. அந்த சூழலில் தமிழ்நாட்டை தாண்டி தென் மாநிலங்கள் முழுவதும் பரவலாக ஆதிக்கம் செலுத்தி, கணிசமாக நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்று தனக்கான முக்கியத்துவத்தை பெற விஜய் திட்டமிடுகிறாராம். இது கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாம்.

Source: Read Full Article