தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசனை நடத்த தமிழக எம்பிக்களுக்கு முதலமைச்சர் விஜய் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் திமுக, அதிமுக எம்பிக்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொகுதி மறுவரையைறை பிரச்னை

இந்தியாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் பொருட்டு தொகுதி மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்படவுள்ளது. வடமாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. அதேசமயம் தென்மாநிலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது.

இந்த தொகுதி மறுவரையறை மூலம் வடமாநில மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை அதிகளவும், தென்மாநிலங்கள் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்த அளவிலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்போது 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு மூலம் அதிகப்பட்சமாக 850 உறுப்பினர்கள் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சட்டமசோதா கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வாக்கெடுப்பில் மக்களவையில் தோல்வியடைந்தது. எனினும் அதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்ந்து எதிர்க்கும் தமிழ்நாடு

தமிழ்நாடு இந்த தொகுதி மறுவரையறை திட்டத்தை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையலாம் என சொல்லப்பட்டாலும் அதனை மத்திய அரசு மறுத்தது. கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், கடந்த 2025 மார்ச் 5 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையில் தவெக அரசும் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளது.

எம்பிக்களுக்கு விஜய் அழைப்பு

இப்படியான நிலையில் தமிழக எம்பிக்களுக்கு முதலமைச்சர் விஜய் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ஒன்றிய அரசு அண்மையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவை தமிழகத்தின் உரிமைகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்த, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகள், மாநில நலன், ஒன்றிய அரசுடன் தொடர்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் அவற்றை நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து வலியுறுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்று, மாநில நலன் சார்ந்த விவாதங்களில் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்குமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த தமிழ்நாட்டு எம்பிக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நலனுக்காக அரசியல் களத்தில் எதிரிகளாக பார்க்கப்படும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article