சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த 16 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பணி நிரந்தரத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அரசுக்கு மிக முக்கியமானக் கோரிக்கையை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வேளியிட்டு, தங்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அவர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களின் அவல நிலையும்

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 2011-2012 ஆம் கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய சிறப்புப் பாடங்களைக் கற்பிப்பதற்காக 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். பல தலைமுறைகளை உருவாக்கிய இந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம், தொடக்கத்தில் இருந்தே கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

கடந்த 16 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணம், பணி ஓய்வு மற்றும் மாற்றுப் பணிகளுக்குச் சென்றது போன்ற பல்வேறு காரணங்களால் சுமார் 4,776 காலியிடங்கள் உருவாகியுள்ளன. இதையெல்லாம் கடந்து, தற்போதைய 2026-2027 ஆம் கல்வியாண்டு வரை சுமார் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் எவ்வித பணிப் பாதுகாப்புமின்றி தற்காலிகப் பணியாளர்களாகவே தங்களின் சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

தவெக தேர்தல் வாக்குறுதி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், தற்காலிக ஆசிரியர்களின் நிலையை உணர்ந்து ஒரு முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அறிக்கையின் 93-வது வாக்குறுதியாக, அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் அனைவரும் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

ஆனால், தவெக குறிப்பிட்ட அந்த 5 ஆண்டுகள் என்ற காலக்கெடுவையும் தாண்டி, பகுதிநேர ஆசிரியர்கள் 16 கல்வியாண்டுகளாகத் தற்காலிகப் பணியில் தவித்து வருகிறார்கள்.

எனவே, தவெக தனது தேர்தல் வாக்குறுதியை உடனடியாகச் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும். இக்கோரிக்கையை அரசாணையாக மாற்றி, பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய அரசு உடனடியாகத் தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடின்றி குரல் கொடுத்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊதிய வேறுபாடும் நிதி ஒதுக்கீட்டுக்கான வழிமுறையும்

தற்போது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல் பாடங்களின் சிறப்பாசிரியர்கள் காலமுறை சம்பளத்தில் பணிபுரிந்து வரும் சூழலில், அதே பணிகளை மேற்கொள்ளும் பகுதிநேர ஆசிரியர்கள் வெறும் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். ஒரே விதமான பணிக்கு இரு வேறு ஊதிய முறை இருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் சிறப்பாசிரியர்களைப் போலக் காலமுறை சம்பளம் வழங்குவதற்கு அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 300 கோடி மட்டுமே செலவாகும். தற்போதைய நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட பிரம்மாண்டமான ரூ. 44,527 கோடி பட்ஜெட் நிதியில் இருந்தே இந்த ரூ.300 கோடியை எளிதாகப் பிரித்து ஒதுக்கி, பகுதிநேர ஆசிரியர்களுக்குக் காலமுறை சம்பளத்துடன் கூடிய பணி நிரந்தரத்தை வழங்க முடியும். இதற்கு அரசாங்கம் ஒரு தீர்க்கமான கொள்கை முடிவு எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

நம்பிக்கையும் ஏமாற்றமும்

அண்மையில் வெளியான பட்ஜெட் அறிவிப்புகளிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையிலும் தங்களின் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வரும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்தவித சாதகமான அறிவிப்பும் வெளியாகாதது ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மாறாக கல்வி அமைச்சர் கடந்த திமுக ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் உதவி தொகை, பணியிட மாறுதல் போன்றவற்றை தற்போது பட்டியலிட்டு கூறியுள்ளது பகுதிநேர ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாற்றத்தை நோக்கிய பயணத்தில், தவெக ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இந்தத் தேக்கம் அவர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே, 16 ஆண்டுகளாகச் சொற்ப ஊதியத்தில் சமுதாயப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு, முதல்வர் விஜய் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். 110 விதியின்கீழ் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட்டு, காலமுறை சம்பளம் வழங்கி அவர்களின் வாழ்வைக் கைதூக்கி விட வேண்டும் என்பதே அனைவரின் தணியாத எதிர்பார்ப்பாக உள்ளது என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article