திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து சிக்கல்

திமுக மாஜி அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து சிக்கல் உருவாகி வருகிறது. அந்த வகையில், தவெக ஆட்சியை கலைக்கும் வகையில் அந்த கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீசார் கைது செய்ய திட்டமிட்டனர். அடுத்ததாக டாஸ்மாக் முறைகேடு வழக்கிலும் போலீசார் கைது செய்ய திட்டமிட்ட நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் கொடுத்த ஜாமின் உத்தரவால் நிம்மதி அடைந்தார்.

அடுத்ததாக போடப்படாத சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகாரில் எ.வ.வேலுவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அடுத்தாக போலீசார் கைது செய்ய திட்டமிட்ட நிலையில், விசாரணைக்கு நேரில் எ.வ.வேலு ஆஜரானார். அடுத்தாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதாக வந்த புகாரையடுத்து முன்னாள் அமைச்சர் சிவசங்கரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

பொன்முடியை கைது செய்ய பிடிவாரண்ட்

இதே போல முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசிய புகாரில் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் உச்சகட்டமாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து அவர் கூறிய சில கருத்துகள் பல தரப்பினரால் மத உணர்வுகளையும் பெண்களையும் இழிவுபடுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தப் பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்துங்கள்

இதனால் தமிழக அமைச்சரவையில் இருந்தும் பொன்முடி விடுவிக்கப்பட்டார். இந்த பேச்சு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், விசாரணைக்கு பொன்முடி நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து பொன்முடியை கைது செய்து செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article