தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும், தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவும் நிதி இல்லை என அரசு கூறும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி பேசியதாவது: “புதிய அரசு பொறுப்பேற்று 105 நாட்கள் ஆகிவிட்டது. இந்த அரசால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான். வறட்சி நிவாரணம் தொடர்பாக சட்டசபையில் கேட்டபோது, ஏற்கனவே சிறப்புத் தொகுப்பு கொடுத்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க அரசிடம் நிதி இல்லை என்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் நிதி இல்லை என்கிறார்கள். அப்படியென்றால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது?

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம். விவசாயிகளின் பிரச்னையை தீர்த்து வையுங்கள் என்று நாங்கள் கூறிவிட்டோம். சட்டசபையில் முன்பெல்லாம் உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். ஆனால், இப்போது கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பாட்டு பாடுகிறார்கள். நான் எப்படி பாட்டு பாட முடியும்? சட்டசபைக்கு வருகிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகிறோமா என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சட்டசபையில் மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்டம்–ஒழுங்கு பிரச்னை என பல்வேறு விஷயங்களை பேசுவதற்காக எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டு செல்கிறோம். ஆனால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பது கிடையாது. மூன்று அமைச்சர்கள் மட்டுமே சட்டசபையில் பதில் அளிக்கிறார்கள். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திசை திருப்புகிறார்கள்.

அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் மக்கள் பிரச்னை பேசுவதற்காக சட்டசபைக்கு வரவில்லை. அவர்களுக்கு தேவையெல்லாம் அன்றைக்கு ஒரு நான்கு ரீல்ஸ். சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என்று கேட்கும் அளவுக்குத்தான் இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை 11.19 சதவீத வளர்ச்சியுடன் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். ஆனால், இன்றைக்கு அந்த வளர்ச்சியை பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளும் டம்மி அரசாக இந்த அரசு உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் எந்தப் பிரச்னை பற்றியும் முதல்வருக்கு கவலை கிடையாது. இதையெல்லாம் இப்போது தான் மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, விரைவில் இந்த ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கும், கோமாளித்தனத்திற்கும் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்றார்.

Source: Read Full Article