விழுப்புரம்: விழுப்புரம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புறவழிச்சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய கோர விபத்தில், இரு இளைஞர்கள் துயரமான முறையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடைபெற்றது எவ்வாறு?

விழுப்புரத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புறவழி சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய கோர விபத்தில், இரு இளைஞர்கள் துயரமான முறையில் உயிரிழந்தனர். விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த நண்பர்களான அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும், முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள தேனீர் கடைக்குச் சென்று தேனீர் அருந்தியுள்ளனர்.

பின்னர், மீண்டும் தங்களது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக முத்தாம்பாளையம் மேம்பாலத்தைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, சாலையில் வேகமாக வந்த கனரக லாரி எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

விபத்து குறித்து உடனடியாகத் தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார், விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டனர். தொடர்ந்து உடற்கூறாய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இரு நண்பர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் சிந்தாமணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article