இந்திய ரயில்வேயின் முதல் அதிவேக ரயில் சோதனைப் பாதை ராஜஸ்தான் மாநிலத்தில் மிக வேகமாகத் தயாராகி வருகிறது. மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனை செய்யும் வகையில் அமைக்கப்படும் இந்த அதிநவீனப் பாதை, இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் பின்னணி மற்றும் முக்கியத்துவம் என்ன ?

ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மூலம் சுமார் ₹967.07 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட நவா பகுதியில், குதா மற்றும் ததானா மித்ரி ஆகிய இடங்களுக்கு இடையே 59 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலப் பாதையாக (Broad Gauge) இது உருவாக்கப்படுகிறது. வடமேற்கு ரயில்வேயின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த மையம், ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திட்டம் நிறைவடையும் போது, சர்வதேசத் தரநிலைகளுக்கு (UIC-518/EN-14363) ஏற்ப ரயில்கள் மற்றும் அவற்றின் உபகரணங்களைச் பரிசோதிக்கும் முழுமையான வசதிகளைக் கொண்ட உலகளாவிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும்.

கட்டமைப்பு மற்றும் பணிகளின் தற்போதைய நிலை

இந்தச் சோதனைப் பாதை பல பிரத்யேகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 23 கி.மீ நீளமுள்ள முதன்மைப் பாதை, குதா பகுதியில் 13 கி.மீ அதிவேக வளையப் பாதை (High-speed loop), நவா பகுதியில் 3 கி.மீ வேகப்படுத்தப்பட்ட சோதனைப் பாதை (Accelerated testing loop) மற்றும் மித்ரி பகுதியில் 20 கி.மீ வளைவு சோதனைப் பாதை (Curve testing loop) ஆகியவை அடங்கும். மேலும் நிலையான சோதனைக்காக 4.5 கி.மீ நீளமுள்ள திருகுப் பாதை (Twisted track) ஏற்கனவே முடிக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தற்போது குதா ரயில் நிலையத்தில் இதற்கான இணைப்புப் பணிகள் மற்றும் மின்னணு சிக்னல் அமைப்புகளில் தேவையான மாற்றங்கள் பாதுகாப்பாகச் செய்யப்பட்டுள்ளன. பிரதான அதிவேகப் பாதை மற்றும் வேகப்படுத்தப்பட்ட சோதனைப் பாதையின் பணிகள் 2026 செப்டம்பருக்குள்ளும், மித்ரி வளைவுப் பாதையின் பணிகள் 2026 இறுதிக்குள்ளும் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை முறைகளும் எதிர்காலத் திட்டம்

இந்த பிரத்யேகப் பாதையில் ரயில்கள் மட்டுமன்றி, தண்டவாளப் பொருட்கள், பாலங்களின் உறுதித்தன்மை, மின் விநியோக உபகரணங்கள், சிக்னல் அமைப்புகள் மற்றும் புவிசார் தொழில்நுட்பக் காரணிகளும் விரிவாகச் சோதிக்கப்படவுள்ளன. 2027-28 ஆம் ஆண்டளவில் வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள் மற்றும் உலகளவில் தயாரிக்கப்படும் பல்வேறு ரயில் பெட்டிகளின் சோதனைகள் இங்கு முறைப்படி தொடங்கும். உள்நாட்டிலேயே சர்வதேச அளவிலான சோதனை மையம் அமைவதன் மூலம், புதிய ரயில்வே தொழில்நுட்பங்களை இந்தியா விரைவாக ஏற்றுக்கொள்வதோடு ரயில்களின் பாதுகாப்பும் செயல்திறனும் பெருமளவில் மேம்படும்.

Source: Read Full Article