
<p style="text-align: justify;">காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான சம்பத் என்பவர், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நிலம் தொடர்பாக சில விவரங்களை அறியத் தேவைப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2024-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு உரிய பதில் கிடைக்காததால், அடுத்து இரண்டாம் கட்ட மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 5-ஆம் தேதி பொது தகவல் அலுவலர் தரப்பில் இதற்கான பதில் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இருப்பினும், அளிக்கப்பட்ட அந்த பதிலில் ஆட்சேபனை தெரிவித்து மனுதாரர் சம்பத் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி மீண்டும் மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடைபெற்றது. அந்த விசாரணையின் போது மனுதாரரான சம்பத் மட்டுமே நேரில் ஆஜரானார். காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்த பொது தகவல் அலுவலர் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் மகாலட்சுமி ஆகிய இரு அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.</p>
<h3 style="text-align: justify;">இழப்பீடு வழங்க உத்தரவு</h3>
<p style="text-align: justify;">விசாரணைக்கு அதிகாரிகள் ஆஜராகாததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்த பொது தகவல் அலுவலர் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் மனுதாரர் சம்பத்திற்கு ₹1,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடிதம் நேற்றை முன்தினம் சம்பத்திற்கு வந்து சேர்ந்தது. மேலும், அடுத்த கட்ட விசாரணையின் போது பொது தகவல் அலுவலர் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் மகாலட்சுமி ஆகிய இரு அதிகாரிகளும் தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article