தமிழ்நாட்டில் முதன்முறையாக தாங்கள் சந்தித்த தேர்தலிலே வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது தவெக. விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் 5ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

திருப்பதியில் பட்ஜெட்டுடன் அமைச்சர் வினோத்:

விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த சூழலில், தமிழக வேளாண் துறை அமைச்சரான வினோத் வரும் 6ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையுடன் சென்று திருப்பதி பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், வேளாண் நிதிநிலை அறிக்கையுடன் கோயிலை சுற்றி வந்து சாமி தரிசனமும் செய்தார்.

அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத எந்தவொரு அரசு ஆவணத்தையும் பொதுவெளியில் எடுத்துச் செல்வது என்பது சட்டப்படி குற்றமாகும். அதுவும், சட்டசபையில் தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை மாநிலத்தை கடந்து எடுத்துச் சென்றிருப்பது சட்டப்படி குற்றமாகும். வினோத்தின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர்:

முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ரகசிய காப்பு பிரமாணம் எடுப்பது வழக்கம். அதன்படி, அரசு ஆவணங்களை பொதுவெளியில் எடுத்துச் செல்வதும், அதை பகிரங்கமாக காட்டுவதும் அந்த உறுதிமொழியை மீறுவதாகவே கருதப்படும். அமைச்சர் வினோத் இன்னும் தாக்கல் செய்யப்படாத வேளாண் நிதிநிலை அறிக்கையை அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் சென்றது மட்டுமின்றி, அந்த நிதிநிலை அறிக்கையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதும் மரபை மீறிய செயலாக கருதப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

இந்த விவகாரத்தில் மரபை மீறிய அமைச்சர் வினோத் மீது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆன்மீக நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், அது அரசு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்று பலரும் வினோத்திற்கு அறிவுரைகளும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தவெக ஆட்சியமைய ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள கண்டனத்தில், பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும்
அரசியல் சாசன ஆவணம். தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்.

என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் செய்தது என்ன?

மேலும், இந்த விவகாரத்தில் அமைச்சர் வினோத் தாக்கல் செய்யப்படாத பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச்செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்களா? அல்லது அதிகாரிகள் அறிவுறுத்தியும் அமைச்சர் வினோத் அதை மீறினாரா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source: Read Full Article